தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு ...
தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனிய நகர சபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடந்தும் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும், எட்டப்படும் எல்லா ஒப்பந்தங்களும் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டு வரும் நிலையிலும் இனப்பிரச்சனை என்ற ஒன்று இங்கு இல்லை என அரசாங்கம் பொறுப்பற்ற தனமாக குருட்டுத் தனமாக கருத்தினை கூறி வரும் நிலையிலும், எமக்கான ஒரு நிரந்தர தீர்வை அடையும் பொருட்டு ஒரு கருத்து கணிப்பை நடத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோருகின்றேன். நன்கு ஆராய்ந்து சிந்தித்தே இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

சாத்வீகப் போராட்டம் மட்டுமல்ல கடந்த 10 வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சரணாகதி அரசியல் கூட சிங்கள அரசாங்கங்களின் மனக் கதவுகளை திறக்கவில்லை. அவர்களது எண்ணங்களிலும், செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் வரலாற்று பட்டறிவில் இருந்தும் முரண்பாட்டு தீர்வு காணும் சர்வதேசத்தின் சமகால அணுகுமுறைகளின் அடிப்படையிலும், சர்வதேச சமூகம் ஒரு கருத்து கணிப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி எமது மக்கள் எவ்வாறான தீர்வை விரும்புகின்றார்கள் என்பதையறிந்து நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்துமாறு நான் அவர்களை கோருவதைத் தவிர வேறு வழிகளில்லை.

நாகரிகம் வளர்ச்சியடைந்து சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள், பிராமாணங்கள் என்பன நிறுவனமயப்படுத்தப்பட்டு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழினம் இலங்கையில் திட்டமிட்ட இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாது, அழிக்கும் நிலமையை இந்தியா, சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை என்பன இனிமேலும் அலட்சியமாக பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. பல நாடுகளில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஜனநாயக ரீதியான நடைமுறை சாத்தியமான சர்வதேச சட்ட வரைமுறைக்குட்பட்ட மிகச் சிறந்த ஒரு வரைமுறை தான் கருத்து கணிப்பு நடத்துவதாகும்.

யுத்தம் நடைபெற்ற போது எமது நாட்டு பிரச்சனையில் தலையீடு செய்த நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முன் வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஆபத்தான நிலைமையில் விட்டு விட்டு ஒதுங்கி நிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளார்கள்.

30 வருட கால யுத்தத்தில் நாம் இழந்த நிலங்களை விட கூடுதலான நிலங்களை கடந்த 10 வருடங்களில் நாம் இழந்துள்ளோம். அரச இயந்திரங்கள் யாவும் எமக்கு எதிரான கட்டமைப்பு, கலாசார படுகொலைக்களுக்காக முடக்கி விடப்பட்டுள்ளன. ஆகவே தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை உனடியாக தற்போது கோருகிறார்கள். கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும். அது தான் நாங்கள் உரத்து கூறும் செய்தி. குறிப்பாக இந்தியாவுடன் இணைந்து சமாதான பேச்சுக்களில் அணுசரணை வழங்கிய இணைத் தலைமை நாடுகள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை கொண்டுள்ளார்கள்.

கருத்து கணிப்பு அடிப்படையிலான தீர்வு ஒன்றை கொண்டு வருவதற்கு காலமாதம் ஏற்படும் பட்சத்தில் சர்வேதச கண்காணிப்புடன் கூடிய இடைக்கால தீர்வு ஒன்றை அவரசமாக கொண்டு வந்து மனிதவுரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பலமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த நேரத்தில் அவர்களை எமது தேர்தல் விஞ்ஞாபனம் கோருகின்றது.

இதய சுத்தியுடனான சமாதான முன்னெடுப்புக்களையும், பேச்சுவார்த்தைகளையும் நாம் என்றும் ஆதரிப்போம். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மத்தியஸ்ததுடன் நடைபெற வேண்டும். இது தமிழர்களின் வரலாற்றில் பட்டறிவின் பால் எழுந்த படிப்பினையாகும்.

கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அர்கள் தெரிவித்த வரும் கருத்துக்கள் அவர் மக்களை குழப்பி அரசியல் லாபம் தேட முயல்வதை வெளிப்படுத்துகிறது. அவரது பொய்யான கருத்துகளை எமது மக்கள் நம்பி ஏமாந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லை. ஆட்சியாளர்கள் பணம் கொடுத்து பல உதிரிக் கட்சிகளை இறக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க சதி செய்வதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கோடி கோடியாக பணம் கொடுத்து பல கட்சிகளை வடக்கு, கிழக்கில் போட்டியிட வைத்துள்ளது என்பது உண்மை. ஆனால் அதன் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பது அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதையே அரசாங்கம் விரும்புகின்றது என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களான பீரிஸ், ஹெகலிய ரம்புகல ஆகியோர் வடக்கு- கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தெற்கில் பொதுஜன பெரமுனவும் வெல்லும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இது தெற்கில் தமது கட்சியையும்,வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் வெல்ல வைக்கும் உளவியல் யுத்தி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க முயல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்திற்கு உதவியது போன்று எதிர்காலத்தில் தாமும் உதவியைப் பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

இலங்கையின் பங்குபற்றுதல் இன்றி சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்க இருந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் நிலையில், ராஜபக்ஷக்களுக்கு எதிராக பயணத்தைடையை ஏற்படுத்தும் நிலையில் எவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் இலங்கையைப் பாதுகாத்துக் கொண்டது என்பது பற்றி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர ஒரு பத்திரிகையில் அண்மையில் தெரிவித்துள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை இலங்கையின் கைளுக்கு தாங்களாகவே கொண்டு வந்ததாகவும், அவர் துணிந்து சொல்லியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இது நடைபெற்று இருக்க முடியாது. ஆகவே சர்வதேச நெருக்கடிகளை தொடர்ந்து சமாளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளது.

மேலும் இவர்களைப் பயன்படுத்தி சலுகை அரசியல் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதததை விதைக்க முடியும் என்பதும் அவர்களது நிலைப்பாடாகும். நாம் இவற்றுக்கு இணங்க மாட்டோம் என்பது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தெரியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டு தடவைகள் ராஜபக்ஷ அரசாங்கம் என்னும் தூது அனுப்பிய போது நான் வழங்கிய பதில்கள் இருந்து என்னை நன்றாக எடை போட்டிருப்பார்கள். ஆகவே இதனை மக்கள் விளங்கிக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment