அரச அதிகாரம், சொத்துக்களை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் - பெப்ரல் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

அரச அதிகாரம், சொத்துக்களை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் - பெப்ரல் அமைப்பு

தேர்தலை நடத்த அரசிற்கு அரசியல் ...
(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றபோதும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அத்துடன் தேர்தல் பிரசாரங்களுக்காக அரச அதிகாரம் மற்றும் சொத்துக்களை பயன்படுத்தியமைக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்திருக்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த கால தேர்தர்தல்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இம்முறை தேர்தலில் இதுவரை பாரிய வன்முறைகள் என 18 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதன் காரணமாக 32 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று பாரதூரமான 14 சம்பவங்கள் எதிர்த்தரப்பு அரசியல் கட்சி ஆதரவாளர்ளுக்கிடையில் ஏற்பட்டுள்ளதோடு 9 சம்பவங்கள் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறை சம்பவங்கள் என 1,825 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றபோதும் அதில் அதிகமானவை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவையாகும். கட்சிகள் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அது 787 ஆகும். அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 287 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

அத்துடன் இம்முறை தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பேணி இடம்பெற்றதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக தபால் மூல வாக்களிப்புக்கு 10 நாட்கள் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். 

தபால் மூல வாக்காளர்கள் மீது ஒருசில நிறுவன தலைவர்கள் அழுத்தம் பிரயோகித்தமை, வாக்களித்த பின்னர் வாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை தொடர்பான சம்பவங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இம்முறை தேர்தலில் கொவிட்-19 தொடர்பான ஒழுங்கு விதிகள் பேணப்பட வேண்டியது கட்டாயமாகும். என்றாலும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களின்போது கலந்துகொள்ளும் ஆதரவாளர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒழுகுவதை காணமுடியவில்லை. 

விசேடமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதில்லை என தெரிவித்து, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

மேலும் அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரம் துஷ்பிரயோகம் தொடர்பாக 76 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அரச ஊழியர்கள் இடமாற்றம் பாரியளவில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் இனம் காணப்பட்ட ஒரு சில இ்டங்களில் இடம்பெற்ற அரச அதிகாரம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று தந்திரோபாய தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

விசேடமாக இம்முறை வாக்களிக்க செல்பவர்கள் வாக்குச்சீட்டில் புள்ளடி இடுவதற்கு பேனை கொண்டு செல்ல வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. அதனால் ஒரு சில மாவட்டங்களில் வேட்பாளர்கள் தங்களின் சின்னம் மற்றும் விருப்பு இலக்கங்கள் பொறித்த பேனைகளை வாக்காளர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றனர். வாக்களிப்பு இடங்களுக்கு இந்த பேனையுடன் சென்றால் அது பாரிய பிரச்சினை ஏற்படுத்தும். அதனால் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment