புதிய பாராளுமன்றத்தின் சகல தகவல்களையும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை - செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

புதிய பாராளுமன்றத்தின் சகல தகவல்களையும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை - செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க

Vacancy created in Parliamentary seat notified to Election ...
பொதுத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்தின் சகல தகவல்களையும் பாராளுமன்ற அமர்வு தினத்தன்றே பொதுமக்களுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பொன்று உருவாக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை உடனடியாகவே பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட ‘பாராளுமன்ற வித்தி’ செய்தி மடல் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் (27) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருப்பதாகவும், நடமாடும் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்ற சம்பிரதாயங்கள், நடைமுறைகள் பற்றிய விபரங்கள் பலவற்றைத் தாங்கியதாக பாராளுமன்றத்தின் முதலாவது செய்திமடலாக இது வெளியாகியுள்ளது. 

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த ஐந்து வருடங்களில் சிறந்த நிறுவனங்களுக்கான இணையத்தளத்துக்கான விருதுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை மேலும் மெருகூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஈ-செய்தி மடலான “பாராளுமன்ற வித்தி’ அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல உள்ளிட்ட பாராளுமன்ற திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment