பாடசாலைகள் நாளை ஆரம்பம் கற்பித்தலுக்கு மட்டும் முன்னுரிமை - ஆசிரியர்கள் தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லலாம் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 5, 2020

பாடசாலைகள் நாளை ஆரம்பம் கற்பித்தலுக்கு மட்டும் முன்னுரிமை - ஆசிரியர்கள் தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லலாம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நான்கு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

ஆரம்பக் கட்டமாக கடந்த வாரம் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை தயாரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் கட்டமாக 5 ஆம் ஆண்டு, 11ஆம், 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

நாட்டின் மொத்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 42 இலட்சமாகும். இவர்களை சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கு அழைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கடந்த தினங்களான பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பாடசாலைகளின் பிரதான வாயிலிலும், வகுப்பறைகளிலும் கை கழுவுதல், உடல் சோதனைகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சகல மாணவர்களுக்கும் இலவச முகக் கவசங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். நான்காம் கட்டமான இறுதிக் கட்டத்தில் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். அத்துடன் முன்பள்ளிகளும் ஆகஸ்ட் பத்தாம் திகதியன்றே ஆரம்பிக்கப்படவுள்ளன. 

பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கால அட்டவனைக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படுகின்ற போதும் அனைத்து ஆசிரியர்களும் மாலை 3.30 மணிவரை கடமையிலிருக்கத் தேவைப்படாது எனவும். தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment

Post Bottom Ad