அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

அரசியல் கைதிகளின் அவலங்களையும் உணர்வுகளையும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் தற்போதைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயங்களை இலகுவாக கையாள்வதற்கு அரசியல் அதிகாரம் வலுவானதாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நேற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை அண்மையில் நாம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திதுள்ளோம். இதன்போது நீண்ட காலமாக சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் பிரதமரிடம் கோரியுள்ளோம். 

அதுமட்டுமல்லாது காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டுமென்றும் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவற்றை நாம் எமது அரசியல் பலத்துக்கேற்ற வகையில்தான் முன்னெடுத்திருக்கின்றோம். 

ஆனால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவற்றை அக்கறையுடன் முன்னெடுத்திருக்கவில்லை.

அதுமட்டுமல்லாது கடந்த நல்லாட்சியை கொண்டு செலுத்திய இவர்கள் அந்த ஆட்சிக் காலத்தில் இதற்கான தீர்வை இலகுவாக கண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தமக்கான சுயநலன்களுடன் செயற்பட்டதால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு தமிழ் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தடுக்கப்பட்டு விட்டன. 

எனவே வருகின்ற சந்தர்ப்பத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கானதாக உருவாக்கிக்கொள்ள எமது அரசியல் பலத்தை அதிகரிப்பீர்களேயானால் நிச்சயமாக உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் எம்மால் முடியுமானளவு தீர்வுகளும் பரிகாரங்களும் கண்டுதரமுடியும் என்றார்.

No comments:

Post a Comment