பஸ்களுக்கிடையில் காணப்படும் போட்டித்தன்மையே விபத்துக்களுக்கு காரணம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

பஸ்களுக்கிடையில் காணப்படும் போட்டித்தன்மையே விபத்துக்களுக்கு காரணம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தேவையின்றி வெளியிடங்களுக்கு ...
(செ.தேன்மொழி)

பயணிகள் பஸ்களுக்கிடையில் காணப்படும் போட்டித்தன்மையே வருடம் தோரும் ஏற்படக் கூடிய விபத்துக்களில் 10 வீதத்திற்கு காரணமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, இந்த விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

அதற்கமைய விபத்துகளை ஏற்படுத்தும் பஸ் சாரதிகள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நுகேகொட பகுதியில் பஸ் ஒன்று இராணுவ கெப் வாகனத்துடன் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர். இன்னுமொரு பஸ்ஸூடன் போட்டிக்கு பயணித்த பஸ் ஒன்றின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக கொலை குற்றம், கடுமையான காயம், காயத்தை ஏற்படுத்தியமை, அவதானம் இன்றி வாகனம் செலுத்தியமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை, வீதி சட்டவிதிகளை மீறியமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து தொடர்பான விபரங்களை சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், சட்டதரணியுமான ருவன் குணசேகர நீதி மன்றத்திற்கு அறிவித்ததுடன், சட்டதரணி ஜனக்க பண்டார இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதற்கமைய வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் 2688 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் சிக்குண்டு 2851 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 34 விபத்துகள் அரச பேருந்துகளினாலும், 184 விபத்துகள் தனியார் பஸ்களினாலும் இடம்பெற்றுள்ளன. 

இவ்வருடத்தில் கடந்த மாதம் இறுதி வரையில் மாத்திரம் 994 வாகன விபத்துகள் இடம் பெற்றுள்ளதுடன், இவற்றில் சிக்குண்டு 1044 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது அரச பேருந்துகளின் மூலம் 11 விபத்துகளும், தனியார் பேருந்துகளின் ஊடாக 50 விபத்துகளும் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது வாகன விபத்துகளில் 10 சதவீதமான விபத்துகள் பஸ்களின் ஊடாகவே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் போட்டிக்கு பயணிக்கும் போது அதிகளவான விபத்துகள் ஏற்படுவதுடன், இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே காணப்படுகின்றது. அதனால் பதில் பொலிஸ்மா அதிபர் இந்த பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பஸ்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

அதற்கமைய இதுபோன்ற விபத்துகளை செய்துள்ளதாக அடையாளம் காணப்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விபத்துகளுடன் தொடர்புடைய பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.

No comments:

Post a Comment