தேர்தலில் ஜனாதிபதியை குறைகூறியோர் தற்போது ஏதாவது ஒன்றை கூற முடியுமா?, உடல்களை தகனம் செய்தமையை தூக்கிப் பிடித்து வருகிறார்கள் என்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

தேர்தலில் ஜனாதிபதியை குறைகூறியோர் தற்போது ஏதாவது ஒன்றை கூற முடியுமா?, உடல்களை தகனம் செய்தமையை தூக்கிப் பிடித்து வருகிறார்கள் என்கிறார் அலி சப்ரி

இன்றைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ முடியாது. பள்ளிகள் உடைக்கப்படும், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய முடியாது. முஸ்லிம்கள் பயந்து ஒடுங்கி வாழும் நிலை ஏற்படும் என்று கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோஷமிட்டவர்கள் இப்போது எங்கே போய் தங்களது முகத்தை வைத்துக் கொள்வார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு சிறு சம்பவத்தையாவது முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தியதாக கூறமுடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வியெழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மக்களை இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் பிரித்து வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் முஸ்லிம் தலைவர்கள் சிலர் பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது கனவு ஒருபோதும் நடக்காது எனவும் தெரிவித்த அலி சப்ரி. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களில் உடல்களை தகனம் செய்தமை குறித்து தூக்கிப் பிடித்து வருகிறார்கள். உண்மையில் அது சுகாதார முறைப்படி சுகாதார அறிவுரைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

முஸ்லிம்களாகிய நாம் தொடர்ந்தும் பிழையான வழிக்குச் செல்லாது மீள சிந்தித்து செயல்படல் வேண்டும். 2015 ஐக்கிய தேசிய கட்சியின் வலைக்குள் வீழ்ந்து றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இருந்து விலக்கி முஸ்லிம்களை தூரமாக்கினார்கள். இங்கு வருகை தந்துள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இணைந்து நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் சென்று முஸ்லிம்களை எமது பக்கம் கொண்டுவருதல் வேண்டும்.

குறிப்பாக வட, கிழக்கில் வாழும் முஸ்லிம் தலைவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். அவர்கள் நமது மக்களை மீண்டுமொரு படுகுழிக்குள் கொண்டு சென்று விடுவார்கள்.

இப்போது முஸ்லிம்களாகிய நாம் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற சகல பிரதேசங்களுக்கும் சென்று நமக்குச் சொந்தமான காணி நிலங்கள் வீடுகளுக்கும் சென்று வருகின்றோம். அதே போன்றுதான் ஆயிரக்கணக்கான காணிகளில் மீளவும் எமது விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.

அண்மையில் பேருவளையில் கூட முடக்கம் செய்யும் போது வித்தியாசமான கோணத்தில் அதனை கதைத்தவர்கள் தற்பொழுது இந்த ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என துஆக் கேட்கின்றனர். காரணம் பேருவளைக்குள் தொற்றுக்குள்ளானவர்களை அகற்றி கொரோனா தனிப்படுத்தல் நிலையத்தில் 200 பேரை கொண்டுவந்து வைத்து அவர்களுக்கு எவ்வித குறையுமின்றி நோன்பு பிடிப்பதற்கும் அதனை திறப்பதற்கும் இராணுவம் உதவி செய்ததை எமது பேருவளை பிரதேசத்தில் கூடுதலாக பரவாமல் தடுத்ததை மெச்சுகின்றனர்.

தினகரன்

No comments:

Post a Comment