வடக்கில் தமிழர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏமாற்றும் மாற்று அணிகளை புறக்கணிக்க வேண்டும் - தேர்தலில் வெற்றி பெற சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள் : சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

வடக்கில் தமிழர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏமாற்றும் மாற்று அணிகளை புறக்கணிக்க வேண்டும் - தேர்தலில் வெற்றி பெற சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள் : சுமந்திரன்

நாடாளுமன்ற தேர்தலை பிற்போட ...
(ஆர்.யசி)

தமிழர்களின் நீண்டகால இலக்கை நோக்கி ஒரு அணியாக தமிழர்களை கொண்டு செல்ல வேண்டும் என நாம் முயற்சித்துக் கொண்டுள்ள நேரத்தில் மாற்று அணியென கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுவும் தமிழர்களை பலவீனப்படுத்துவதும் மட்டுமே இவர்களின் நோக்கமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.எ. சுமந்திரன் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு செல்கின்ற நிலையில் அவர் இவற்றைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழர் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் இந்த நாட்டில் சிங்கள மொழியின் தொன்மையை போன்று தமிழும் தொன்மையான மொழியாகும். எமக்கென்ற தனியான மொழி, கலாசாரம் உள்ளது. நவீன உலகில் பயன்படுத்தக் கூடியதும் எல்லா பயன்பாடுகளுக்கும் உதவுகின்றதுமான முறையான முழுமையான மொழி எம்மிடத்திலும் உள்ளது. 

சர்வதேச சட்டத்திலே நாங்கள் சுய நிர்ணய உரித்துக்குரியவர்கள். அந்த உரிமையை உபயோகித்து எம்மை நாமே ஆளுகின்ற அரசியல் அமைப்பு முறைமையை கொண்டிருக்கின்றமையே எமது அரசியல் நிலைப்பாடு. எமக்கு ஆதரவு வழங்கிய தமிழ் மக்கள் இந்த நிலைப்பாட்டிற்காகவே வாக்களித்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கைக்கு வழங்கிய மாகாண சபை முறைமையை நாம் முழுமையாக ஏற்றுகொள்ளாது போன சந்தர்ப்பத்தில் கூட, இருக்கின்ற மாகாண சபை முறைமையில் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவதாக மூன்று தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். 

அதற்கமையவே 2011 ஆம் ஆண்டில் இருந்து 18 சுற்று பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை மீறி எம்மை அடக்கி ஆழ முயன்றது மட்டுமல்லாது தமது சொந்த மக்களையே அடக்கி ஆழ முயன்றதனால்தான் தெற்கின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தோம். 

அதன் பின்னர் உருவாக்கிய நல்லிணக்க அரசாங்கத்தில் நாம் அங்கத்தவராக இல்லாது போனாலும் ஆட்சியை உருவாக்கியதில் பெரும் பங்குள்ள அணியாக அவர்களை ஆதரித்தோம். அதன் மூலமாகவே அரசியல் ரீதியிலான வரைபொன்றை உருவாக்க முடிந்தது.

இந்த நாட்டிற்கான சமூக ஒபந்தம் ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால்தான் எம்மாலான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்தோம். அதில் வெற்றியும் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதும், பாராளுமன்ற அதிகாரத்தை உருவாக்குவதும் மற்றும் அரசியல் தீர்வு காண்பது என்பதுவென தீர்மானிக்கப்பட்டது. 

முதல் இரண்டு காரணிகளை பலர் எதிர்த்தாலும் கூட அதிகார பகிர்வு விடயத்தில் சகலரும் இணக்கம் தெரிவித்தனர். மாகாண அதிகாரப் பகிர்வு குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாண முதலைமைச்சர்கள் தவிர்ந்து ஏனைய ஏழு மாகாண முதல்வர்களும் கலந்துகொண்டனர். விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அதிகார பகிர்வு குறித்த கரிசனை கிடையாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசுவதே முக்கிய வேலையாக உள்ளது. அதேபோல் எமது கோரிக்கையான சமஷ்டி என்றால் நாடு பிரிந்துவிடும் என கூறுகின்றார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கதான் இந்த நாட்டிற்கு சமஸ்டியை அறிமுகப்படுத்தியவர். ஆகவே அவர் வரலாறுகளை மறந்து பேசக்கூடாது. 

மஹிந்த ராஜபக்ஷ வேண்டுமென்றே சிங்கள மக்களை தவறாக வழிநடத்துகின்றார், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மூட்டுவதும், தமிழர்கள் குறித்த பயத்தை உருவாக்குவதும் மஹிந்த ராஜபக்ஷதான். அன்று சமஷ்டி சரியென ஏற்றுகொண்டவர்கள் இன்று தமது சுயநல அரசியலுக்காக சமஷ்டி மோசமென பொய் பிரசாரம் செய்கின்றார். 

தமிழர்கள் குறித்து சிங்களவர் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் மிக மோசமானவர்கள், அண்ணனை விடவும் தம்பி மிகவும் மோசமானவர். அன்று மகாவலி வலயம் என கூறிக்கொண்டு தமிழர் பகுதியை ஆக்கிரமித்தவர்கள் இன்று தொல்லியல் பிரதேசங்கள் என கூறிக்கொண்டு ஆக்கிரமிக்க நினைகின்றனர். அதற்கு நாம் இடமளிக்ககூடாது.

நாம் தனி நாடு கேட்கவில்லை. இது முழு நாட்டிற்கும் தெரிந்த விடயம். அவ்வாறு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள். எமது அரசியல் இலக்கு தெட்டத்தெளிவாக உள்ளது. முழுமையான சமஷ்டி ஆட்சி எமக்கு வேண்டும். அதனை கேட்கும் உரித்து எமக்கு உள்ளது. அதனையே நாம் கேட்டுக்கொண்டு வருகின்றோம். 

எனினும் இவ்வாறான சூழலில் கூட மாற்று அணியென கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதே இவர்கள் அனைவரதும் நோக்கம். ஒரு அணியாக தமிழர்களை கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம். மாற்று அணியொன்று வேண்டும் என்பதன் அர்த்தம் தமிழர்களின் பலத்தை குறைப்பது மட்டுமேயாகும். தமிழர்களை பலவீனப்படுத்துவது மட்டுமே இவர்களின் நோக்கமாகும் என்றார்.

No comments:

Post a Comment