ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி - கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி - கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார்

"கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கண்டி மாவட்டத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் வேட்பாளர் வேலுகுமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இதன்படி இன்று (03.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது. ஆனால், கடந்த 6 மாதங்களில் இவர்கள் செய்தது என்ன? கொரோனா விவகாரத்தில் சற்று காத்திரமாக செயற்பட்டிருந்தாலும் ஏனைய விடயங்களில் தோல்விகண்டுள்ளனர். அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது.

குறிப்பாக சிவில் நிர்வாகத்துக்கு பதிலாக இராணுவமயப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாது செய்யப்படும் எனவும் அறிவிப்பு விடுக்கின்றனர். தப்பிதவறியேனும் ராஜபக்ச தரப்பு ஆட்சிக்குவந்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். எனவே, நாட்டில் எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுக்காக அடித்துக்கொள்கின்றனர். 10 பேரை கூட்டிவந்து ஆயிரம் பேர் இணைந்துவிட்டனர் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன. அவர்கள் விருப்பு வாக்குளுக்காக மோதிக்கொண்டாலும் மக்கள் சக்தி எம்பக்கமே. எனவே, சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும்." - என்றார்.

No comments:

Post a Comment