கூட்டமைப்பிடம் தமிழ் மக்களை சுய கௌரவத்துடன் வாழ வைக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது, 4 ஆசனங்களை பெறுவோம் என பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது - பொதுஜன பெரமுன வேட்பாளர் சந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

கூட்டமைப்பிடம் தமிழ் மக்களை சுய கௌரவத்துடன் வாழ வைக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது, 4 ஆசனங்களை பெறுவோம் என பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது - பொதுஜன பெரமுன வேட்பாளர் சந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தமிழ் மக்களை சுய கௌரவத்துடன் வாழ வைக்கனும் எனும் எண்ணம் துளியளவும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளிவிபரத்தரவுகள் தெரியாத அரசியல்வாதிகளை மட்டக்களப்பு மக்கள் வாக்களித்து தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பது கவலையளிக்கின்றது. இவ்வாறான தவறுகளை தமிழ் மக்கள் இனியும் விடக்கூடாது. 

இப்போது தேர்தல் காலமாகும். இத்தேர்தலுக்கு தமிழ் மக்களின் இல்லங்களை நாடிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஆதரவாளர்கள் 5 ஆண்டுகள் கடந்து மீண்டும் உங்களிடம் வாக்குச் சேகரிக்க வருவார்கள்.

இதனை தமிழ் மக்கள் யதார்த்தமாக உணர்ந்து செயற்பட வேண்டும். இதனை உணராவிட்டால் தமிழ் பிரதேச அபிவிருத்திகள், பெற்ற பட்டதாரிகள், படித்த இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பு போன்ற பல விடயங்களை மாற்றுச் சமூகம் அனுபவிப்பதை தமிழ் மக்கள் பார்த்து கொட்டாவி விடக்கூடாது. 

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களை பெறுவோம் என பகல் கனவு கண்டு கொக்கரிக்கின்றது. அது ஒருநாளும் நடக்காது.

வெற்றுக்கோசத்தையும், உணர்ச்சி ஊட்டும் செயற்பாட்டை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலி தாரக மந்திரங்களை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டபாயவின் கரங்களை பலப்படுத்துவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு படு தோல்வியை சந்திக்கும். 

பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் இன்னும் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தால் இருள் சூழ்ந்து அபிவிருத்தியின்றி, காணப்படுகின்றது.

மேலும் வேலைவாய்ப்பில்லாமலும், மக்களின் அடிப்படைத் தேவைகள் இல்லாமலும், ஓலைக் குடிசையில் தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள் என்றார். 

வெல்லாவெளி நிருபர்

No comments:

Post a Comment