கம்பஹாவில் 130,000 தமிழ் பேசும் வாக்காளர்களும் சிந்தித்து வாக்களித்தால் இரு சிறுபான்மை உறுப்பினர்களை பெறலாம் - வேட்பாளர் சசிகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 28, 2020

கம்பஹாவில் 130,000 தமிழ் பேசும் வாக்காளர்களும் சிந்தித்து வாக்களித்தால் இரு சிறுபான்மை உறுப்பினர்களை பெறலாம் - வேட்பாளர் சசிகுமார்

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

"எனது பெயர் சசிகுமார். நான் கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தொலைபேசி சின்னத்தில் ஏழாம் இலக்கத்தில் போட்டியிடுகிறேன். எனது தலைமைத்துவமானது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள். அவர்களின் தலைமையிலேயே நான் கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் வத்தளை நகர சபை உறுப்பினருமான சசிகுமார் தெரிவித்தார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட கிராமத்தில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் பேசும் இந்துக்கள். தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று சிறுபான்மை சமூகத்தினர் கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்றோம். ஒன்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும், சுமார் 72 வருடங்களாக நாங்கள் தேர்தல்களில் வாக்களித்து வருகிறோம். ஆனால் இதுவரை தமிழ் பேசும் பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு நாங்கள் முயற்சி எடுத்ததில்லை. ஆனால் இம்முறை தமிழ் பேசும் இரு உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அது வாக்காளர்களான உங்களது கைகளிலேயே இருக்கிறது. 

வட கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஆகிய நாம் பெரும்பான்மையாக வாழ்கின்றோம். அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றோம். அங்கு சகல பிரதான கட்சிகளிலும் தமிழ் பேசும் மக்கள் போட்டியிடுகிறார்கள். எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வெல்வார்கள். அங்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் வென்ற யாராவது தமிழ் பேசும் உறுப்பினர் எமக்காக குரல் கொடுப்பார். 

ஆனால் கம்பஹாவில் அப்படியல்ல. இங்கு பெரும்பான்மைக்கு கீழ் சிறுபான்மையாக நாங்கள் வாழ்கின்றோம். இங்கு தமிழ் பேசும் இந்துக்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 56 000 அளவிலேயே இருக்கின்றன. இஸ்லாமியர்களின் வாக்குகள் 85 000 அளவிலேயே இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியில் இரு சிறுபான்மையினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் நீர்கொழும்பை சேர்ந்த இலக்கம் 15 இல் போட்டியிடும் ஷிராஸ் மொஹமட் மற்றும் இலக்கம் 07 இல் போட்டியிடும் சசிகுமார் ஆகிய நான். 

கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் 130,000 இருக்கின்றன. இதுவரை காலமும் அவற்றை சரியாக பயன்படுத்தியிருந்தால் கட்டாயம் தமிழ் பேசும் உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருப்பார்கள். இங்கு போட்டியிடும் 21 வேட்பாளர்களில் 19 பேர் பெரும்பான்மையினர். கிட்டத்தட்ட 16.5 இலட்சம் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் கம்பஹாவில் இருக்கிறது. ஆனால் அந்த வேட்பாளர்கள் 19 பேரும் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் இடங்களை விட தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இடங்களையே குறி வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். எமது மக்களும் முதலில் அவர்களுக்கே விருப்பு வாக்குகளை வழங்கி விட்டு எம்மவர்களுக்கு எஞ்சியதை வழங்கி வந்தனர். உண்மையில் அது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகம்.

நீங்கள் இம்முறை முதலில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் இருவரினதும் இலக்கங்களுக்கு புள்ளடி இடுங்கள். எமது கடந்த காலத்தில் விட்ட பிழைகளை திருத்திக்கொள்ள எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சிறுபான்மை மக்களை முற்றாக புறக்கணித்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் கூட இடம் தராதவர்களுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். நீர்கொழும்பு, கடான, வத்தளை, பேலியகொட, மள்வானை, திஹாரிய, கஹட்டோவிட்ட, கல்லொழுவ போன்ற பிரதேசங்களில் வசிக்கும் எமது மக்கள் இந்த செய்தியினை படித்து தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் இதனை கொண்டு செல்ல வேண்டும். 

இது இனவாதமோ மதவாதமோ அல்ல. இது எங்கள் உரிமை. அதனை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் இரு வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருநூறு வீதம் இருக்கிறது. ஆனால் அது நீங்கள் இடும் புள்ளடியே உறுதிப்படுத்தும் என்பதனை நான் ஆணித்தரமாக கூறுகிறேன்.

No comments:

Post a Comment