பணத்தை வரையறையற்று அச்சிடுவதால் ஏற்படப்போகும் நிலை குறித்து எச்சரிக்கிறார் எரான் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

பணத்தை வரையறையற்று அச்சிடுவதால் ஏற்படப்போகும் நிலை குறித்து எச்சரிக்கிறார் எரான்

(செ .தேன்மொழி)

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் மீது அரசியல் தலையீடுகளை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, வரையறையற்று பணத்தை அச்சிடுவதால் பாரியளவில் பொருட்களின் விலை அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக, அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை .

தங்களது தவறை மறைப்பதற்காகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஊழியர்களை அழைத்து கடுந்தொனியில் சாடியிருந்தார். இந்நிலையில் பணம் அச்சிடுவதன் ஊடாக பொருளாதார நெருக்கடியை சீர்செய்துகொள்ள முடியும் என்ற எண்ணத்தில் தற்போது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரசாங்கம் 300 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நீதியான முறையில் பணத்தை அச்சிடுவது என்றால் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, நாட்டின் உற்பத்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் அதனைவிட அதிகமாக பணத்தை அச்சிட முடியாது. அவ்வாறு அச்சிட்டால் பொருட்களின் விலையை பாரியளவில் அதிகரிக்க வேண்டியேற்படும். 

இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள பணத்தில் 110 பில்லியன் ரூபாய் பணத்தை வங்கிகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது வங்கிகளின் செயற்பாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டு வரும் அரசாங்கம், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது. தேர்தலை வெற்றி கொள்வதற்காக இனவாத்தையும் தூண்ட ஆரம்பித்துள்ளனர்.

மொட்டுவின் உறுப்பினர் ஒருவர் தமிழர்கள் மத்தியில் சிங்கள இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவிக்கையில், அதே கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களை கொலை செய்ததாக குறிப்பிட்டு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றின் மீதான அரசியல் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment