காலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்...! - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

காலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்...!

சுஐப் எம்.காசிம் 

முஸ்லிம் அரசியல் தலைவர்களில் சமூகத்தின் கல்வியில் கண்ணாக இருந்த தலைவர் டாக்டர். மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் 116 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது பெருமைகள் நினைவூட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. "கற்றவரென்போர் கண்ணுடையோர் முகத்திலிரண்டு புண்ணுடையோர் கல்லாதோர்" என்ற திருக்குறள் வாசகத்தை செயலில் காட்டுவதில்தான், மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் சிந்தனைகள் சுழன்றன.

வெறும் வியாபாரச் சமூகமாகவும், பண்டமாற்றாளர்களாகவுமிருந்த முஸ்லிம்களின் கல்வியிலேயே, இவரது அதிக அக்கறையிருந்தது. காரணமில்லாமல் எதிலும் கண் வைப்பவருமில்லை இவர். "பொன்னோடு வந்து கறியோடு பெயர்வர்" என்ற வழக்கு மொழி, அரேபியரின் வியாபார இலட்சணத்தை வெளிப்படுத்த பண்டைய காலத்தில் பாவிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆபரணங்களைக் கொண்டுவந்து விற்பனை செய்து, இங்குள்ள ஏலக்காய், சாதிக்காய், கராம்பு, தேயிலை, இறப்பர் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்ற அரேபியரின் வர்த்தக உறவுகளையே இவ்வழக்கு மொழி விவரிக்கிறது. இதிலிருந்துதான் வெறும் வியாபாரச் சமூகமாக முஸ்லிம்கள் பார்க்கப்படத் தொடங்கினர். இந்தப் பார்வைகள் மாற்றப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பெறுமானங்கள், நாட்டின் அரசியலில் அவர்களின் வகிபாகங்கள் வளர்க்கப்பட வேண்டும். வயிறோடு ஒட்டியுள்ள முஸ்லிம்களின் வறுமையை ஒழித்து முடிக்க, முஸ்லிம்கள் கல்வியைக் கண்ணெனக் கருத வேண்டும். இவைகள்தான் டாக்டர் பதியுதீனின் சிந்தனைப் புரட்சிகள்.

இவரின் இந்த சிந்தனைச் சித்தாந்தத்திற்கு அவரிடமிருந்த அரசியல் அதிகாரமும் உறுதுணையாகிற்று. மேலும், டாக்டர் பதியுதீனின் திக்கெனப் பேசும் துணிவுக்கு ஒரு தனிரகமிருந்தது. இந்த ரகம் ஒருபோதும் ரகளையை ஏற்படுத்தியதில்லை. ஒரு முறை ஆசிரியர் ஒருவர் தனக்கு இடமாற்றம் தருமாறு வந்தவேளை, அவருக்கு இடமாற்றம் வழங்குமாறு கோர, அவ்வதிகாரி அப்படிச் செய்ய முடியாதென்றுள்ளார். இதற்கு “பதி” அளித்த பதிலென்ன தெரியுமா? அப்படியானால் பாடசாலையை அந்த ஆசிரியரின் வீட்டிற்கு அருகில் கொண்டுபோய் வையுங்கள் என்பதுதான்.

"ராஜாதேசிங்" என்ற இஸ்லாத்தை நிந்தனை செய்யும் திரைப்படம் கொழும்பு கிங்க்ஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்ட போது, பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத், உடனடியாகப் பிரதமர் ஸ்ரீமாவோவை தொடர்புகொண்ட வேளேயில், புத்தளத்தில் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த அவர், காலாசார அமைச்சரின் தீர்மானத்தில் தலையிட முடியாதெனக் கூறினார். திக்கெனப் பேசுவதில் தருணம் தப்பாத பதியுதீன் மஹ்மூத், தீர்மானிக்க முடியாவிட்டால் நாளை திரைப்பட மாளிகைக்கு தீ வைப்போமென்றார். அடுத்த கணம் படமாளிகை வெறிச்சோடியது. வெறும் நியமன அமைச்சராக இருந்த இவர், வெடுக்கெனப் பேசித்தான் முஸ்லிம் சமூக அரசியலில் குறிப்பாக, கல்வியில் சாதனை படைத்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனியான முஸ்லிம் சேவைக்கு அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் வழிதிறந்த காலத்தில், எழுத்தாளர் எம்.எம்.மக்கீன் (மானா) இப்பிரிவில் ஆங்கில, தமிழ் தட்டெழுத்தாளராக இருந்தமை, எனது நினைவுகளைப் பெருமைப்படுத்தி, மர்ஹும் பதியுதீனின் ஆழ்ந்த புலமையைப் புடம்போடுகிறது.

அரசியலுக்காக சமூகமன்றி சமூகத்துக்காகவே அரசியல் என்ற, செந்நெறியில் சென்ற இவர், மக்கள் அங்கீகாரம் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருமுறை போட்டியிட்டார். வெற்றி நிச்சயமில்லை என்று தெரியவருகையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பரீட் மீராலெப்பைக்கு வாக்களிக்குமாறு, வாக்குச் சாவடிக்கு முன்னால் நின்றவாறே மக்களைக் கோரிய இவரின் பெருந்தகை அரசியல், சமூக சிந்தனைக்கு சிறந்த முன்னுதாரணம்.

இனத்துவ அரசியலின் தனித்துவம் பற்றிப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், கலாசார தனித்துவத்தைப் பற்றிச் சிந்தித்து, முஸ்லிம் மாணவியருக்கு தனியான ஆடைகளை அறிமுகமாக்கியதும் இவரது காலத்தில்தான். மூன்றிலிரண்டு பகுதி முஸ்லிம்கள், சிங்கள சகோதரர்களின் வாழ்வியல் நிலங்களோடு பிணைந்துள்ளதால், சிங்கள மொழிப் புலமைகள் சிங்கள, முஸ்லிம் சகவாசத்திற்கு உறவுப் பாலமாகச் செயற்படும். இச் செயற்பாடுகள் துரதிஷ்டவசமாக ஏற்படும் சமூக முறுகல்களைத் தணிக்க உதவும் என்ற உணர்தலுக்குள்ளானவர் பதியுதீன் மஹ்மூத். சிங்கள மொழியை முஸ்லிம்கள் கற்பதற்குத் தூண்டும் நிலையும் இவருக்கு இதனால் ஏற்பட்டதே!

தென்னிலங்கையில் சமூகங்கள் துருவப்படுவதைத் தடுக்கவும், வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றி, தென்னிலங்கை புரிந்துகொள்ளவும் போரியல் சூழலின் பிற்பகுதியில் இவரது மொழிச் சிந்தனைகள் ஓரளவு பங்காற்றியது. இதில் இன்னொன்றும் இங்குள்ளது. வடக்கு, கிழக்கு விடுதலைச் சமரில், முஸ்லிம்களின் தடுமாற்ற நிலைமைகளைத் தென்னிலங்கைக்குச் சாதகமாக்குவதற்கு, இத்தலைவர்களின் தலையீடுகள் பங்களித்ததைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சிங்களப் புலத்தில் வாழும் முஸ்லிம்களை, தென்னிலங்கை சகவாசத்திற்குள் ஈர்ப்பதற்காகத்தான் டாக்டர் பதியுதீன், சிங்கள மொழியும் முஸ்லிம்களுக்கு தவிர்க்க முடியாத தாய்மொழியாக வேண்டுமென்றிருக்கலாம். இவையத்தனைக்கும் 1815 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள, முஸ்லிம் கலவரம்தான் வித்திட்டிருக்கும்.

இவரால் கொண்டுவரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் கொள்கையால், சில மாவட்ட மாணவர்களின் திறமைகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், தனியொரு சமூக நலனுக்காக இத்திட்டம் கொண்டுவரப்படவில்லை என்பதை, விமர்சகர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்து, தமிழ் பேசும் சமூகங்களின் கல்விக்கு கலங்கரை விளக்காகினார் மர்ஹும் பதியுதீன் மஹ்மூத்.

இவ்வாறான ஒரு தலைவரின் வாழ்நாள் விடைபெறும் காலகட்டத்தில், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் நண்பர் ரஷீட் எம்.ஹபீல், அவரைச் சந்திப்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். எதுவும் பேசமுடியாத நிலையிலிருந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத், எதையோ சொல்ல வாய் திறந்ததில், தனது சமூகம் மீதான கல்வி மேம்பாடுகள் மெதுவாக வெளிப்பட்டன. இவரது பெருமைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் ரசூல்டீன், அடிக்கடி எனக்கு எடுத்துரைத்து, மறைந்தும் மறவாத ஒரு தலைவருக்காக எமது சமூகம் எதை செய்தது? என்ற கேள்வியைக் கேட்பதுமுண்டு. இன்று அவரை வெறுங்கையுடன் நினைவு கூரும் சமூகமாக இல்லாது, டாக்டர் பதியுதீனின் கல்விச் சிந்தனைகளை உயிரூட்டுவோம்.

No comments:

Post a Comment