ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - தமிழ், முஸ்லிம் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடுத்து ஒன்றுபட வேண்டும் : மஹிந்த யாப்பா அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - தமிழ், முஸ்லிம் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடுத்து ஒன்றுபட வேண்டும் : மஹிந்த யாப்பா அபேவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி பொதுத் தேர்தலின் வெற்றியிலே முழுமைபெறும். ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், தேர்தல் திருத்த முறைமை ஆகிய விடயங்களுக்கு உறுதியான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தால் மாத்திரமே இலக்கினை அடைய முடியும்.

பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன தனித்து நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். பிறிதொரு கட்சியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் முரண்பாடுகளே மிகுதியாக அமையும். அத்துடன் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஒரு கட்சி சார்ந்தவராகவும், பிரதமர் பிறிதொரு கட்சி சார்ந்தவராகவும் இருந்தமையினால் அரசாங்கத்தின் கொள்கை முரண்பட்டதாக இருந்தது. இதனால் முழு அரச செயலொழுங்கும் பலவீனமடைந்தது. ஆகவே இம்முறை ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவே செயற்படுகிறார். அரசியல் கட்சிகளை இலக்காக கொண்டு அவர் செயற்படவில்லை.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துகொண்டு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க ஒன்றுபட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும். தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்தவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். என்றார்.

No comments:

Post a Comment