அரசாங்கம் தேர்தலை இலக்குவைத்து ஏமாற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது, அமெரிக்காவும் எம்.சி.சி. ஒப்பந்தம் பொய் என அறிவித்துள்ளது - எரான் விக்ரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

அரசாங்கம் தேர்தலை இலக்குவைத்து ஏமாற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது, அமெரிக்காவும் எம்.சி.சி. ஒப்பந்தம் பொய் என அறிவித்துள்ளது - எரான் விக்ரமரத்ன

(செ.தேன்மொழி)

எம்.சி.சி. ஒப்பந்தம் இரு கட்டங்களாக கைச்சாத்திடப்பட்டதாகவும், அதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது போலிப் பிரசாரமாகும். பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே இவ்வாறான ஏமாற்று பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, ஒப்பந்தம் தொடர்பான வீண் பேச்சுக்களை நிறுத்திவிட்டு அதில் கைச்சாத்திடுவதா? இல்லையா? என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தல் காலங்களில் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை ஆளும் தரப்பினர் முன்வைத்திருந்தனர். ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு பெரும் அச்சறுத்தல் ஏற்படவாய்ப்பிருப்பதாகவும் அதனை நல்லாட்சி அரசாங்கம் கைச்சாத்திடுவதாகவும் காண்பித்து தேர்தலை வெற்றி கொண்டு ஆட்சியையும் கைப்பற்றினர். 

தங்களது ஆட்சிக் காலத்தில் எம்.சி.சி ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்த இவர்கள், தங்களது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குழுவொன்றை நியமித்தனர்.

தற்போது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுவதில் தேர்ச்சி பெற்ற அரசாங்கம், தேர்தலை வெற்றி கொள்வதற்காக மீண்டும் எம்.சி.சி. நாடகமொன்றை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக தாங்கள் நியமித்திருந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இரு கட்டங்களாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதனுடாக அரசாங்கத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

அரசாங்கத்திற்கு எந்த முறையிலாவது நிதி கிடைக்கப் பெற்றால், அதனை கணக்காளர் நாணயம் மற்றும் மத்திய வங்கியிடமிருந்து அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு கடந்த அரசாங்கத்திற்கு நிதி வழங்கப்பட்டிருந்தால் இவற்றின் ஊடாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

இதேவேளை எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கையை மக்களும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை நிராகரிப்பதாகவே தெரிவித்திருந்தது. இதனால் ஒப்பந்தத்தை ஆராய்ந்து பார்த்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

எம்.சி.சி.யை நிராகரிப்பதாக அரசாங்கம் உறுதியாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது ஏமாற்று பேச்சாகும். ஒருபோதுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எம்.சி.சியை அவ்வாறு மறைமுகமாக கைச்சாத்திடவும் முடியாது. 

ஏனைய ஒப்பந்தங்களை அமைச்சரவை அனுமதியுடன் மாத்திரம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும், எம்.சி.சி.யை பொநுத்தமட்டில் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் கைச்சாத்திட முடியும். 

இதேவேளை அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் தொடர்பில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் நிதி கொடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு எந்த நிதியும் செலவிடப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் எவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment