போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக எதிரிகளை அடையாளம் காண, உறுதிப்படுத்த முறையான செயற்பாடு அவசியம் - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக எதிரிகளை அடையாளம் காண, உறுதிப்படுத்த முறையான செயற்பாடு அவசியம் - பாதுகாப்பு செயலாளர்

ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் சீருடை அணிந்த அதிகாரிகளை அடையாளம் காண சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் .

"நாங்கள் இராணுவ கலாசாலையில் இருந்தபோது, ​​மிகவும் ஆபத்தான எதிரி யாரெனில் அவர்கள் எமக்குள்ளே இருக்கும் எதிரிகளாகும் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க நமக்குள் இருக்கும் இந்த எதிரியை நாம் இப்போது அடையாளம் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது ஒரு பயனற்ற முயற்சியாக அமைந்துவிடும் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நிட்டம்புவ தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நேற்று (26) காலை இடம்பெற்ற புதிய புனர்வாழ்வு நிலையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய அவர், விரைவில் இலங்கையிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பயனுள்ள வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு அனுதாபம், பரிவு மற்றும் உதவி என்பன அவசியமாகும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
ஏறக்குறைய 1,000 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை இலக்காகக் கொண்ட முழுமையான புனர்வாழ்வு மையம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நிர்மாணிக்கப்படும்.

‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தவறான செயல்களைச் செய்வதன் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என் கூறிய பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்குவது ஒரு மகத்தான பணியாகும் என தெரிவித்ததுடன், எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், முதலாவதாக போதைப்பொருள் பாவனைக்கு இரையாகியுள்ள சிறுவர்களையும் மீட்பதும், இரண்டாவது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதும், மூன்றாவது தவறு செய்பவர்களுக்கு உதவியளிக்க உத்தியோகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காண்பதும் ஆகும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் டொக்டர் லக்நாத் வெலகெதர, 1984 முதல் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை 'போதை மருந்து இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்காக' ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வளமான தேசம் எனும் எண்ணக்கருவிற்கு அமைய சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு வசதிகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்தார்.

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கான ‘நவ திகந்தய’ புதிய கட்டிடம் ஜெர்மனிய அரசு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்படவுள்ள அதேவேளை, நிர்மாணம் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் போது உரை நிகழ்த்திய ஜேர்மனியின் பிரதி தூதுவர் ஆண்ட்ரியாஸ் பெர்க், பயனுள்ள குற்றவியல் நீதி பதில்களின் மூலம் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுக்கவும் எதிர்வினையற்றவும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என தெரிவித்தார்.

"இந்த புனர்வாழ்வு நிலையத்தின் விரிவாக்கமானது, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில நான்காவது திட்டமாகும். இது சிறைத் துறையில் திறனை வலுப்படுத்த ஏதுவாக அமையும்" என அவர் தெரிவித்தார்.

தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய கட்டிய விரிவாக்கமானது, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் பாவனையாளர்களை சிறைச்சாலைகளிலிருந்து நீக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என பெர்க் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலின் சவால்களை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த திட்டம் பூர்த்தி செய்யும் என்றும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் சிகிச்சையை ஒரு தண்டனை முறையாக கருதவில்லை என அவர் தெரிவித்தார்.

"போதைப்பொருள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் அரசாங்கம், தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சிவில் சமூகம், நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகிறோம்," என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் ஆலன் கோல் கூறுகையில், கொவிட்-19 முடக்கங்களுக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலுக்கான நில வழிகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடல் மார்க்கம் இலகுவானதாக மாறியுள்ளது. எனினும் இலங்கை கடற்படை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிராந்திய போராட்டமானது முக்கிய பங்குவகித்தது.

சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதாக உறுதியளித்த கோல், சிறைச்சாலை அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய மூலோபாயத்தையும், அவர்களை மறுவாழ்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளையும் கோல் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத அரியசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்சன ஹெட்டியாராச்சி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மலிக சூரியப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment