மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் குறைவு - உதவி தேர்தல் ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் குறைவு - உதவி தேர்தல் ஆணையாளர்

மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான முன் ஆயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதில் பங்குபெற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தை ஆரம்பித்து கடந்த புதன்கிழமை முதல் மாவட்ட மத்திய முறைப்பாட்டு நிலையம் இயங்கி வருகின்றது. குறித்த முறைப்பாட்டு நிலையத்தின் தொலைபேசி இலக்கம் 023-2223820.

இத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். அதற்கு பொறுப்பாக மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகான் குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திலும் தங்களுடைய முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும். அல்லது 011-2886179 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் முறைப்பாடு செய்ய முடியும். தற்போது தேர்தல் பிரசார அலுவலகங்கள் மாவட்ட மட்டத்தில் திறக்கப்பட்டு வருகின்றது.

அதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முறை அனுமதி வழங்கப்படும் போது பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக அனுமதிகள் வழங்கப்படும்.

அதனடிப்படையில் மத்திய தேர்தல் அலுவலகம், கிளை அலுவலகங்களை தற்போது தொடக்கம் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் திறந்து வருகின்றனர். இவற்றை விட மன்னார் மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

4 ஆயிரத்து 255 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் 59 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4 ஆயிரத்து 196 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பிற்கான விநியோகம் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இம்முறை தேர்தலில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 2500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதற்கான காரணம் புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களை கொண்டவர்களின் பெயர்கள் இங்கிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டமையே காரணமாகும் என்றார்.

மன்னார் நிருபர்

No comments:

Post a Comment