கராச்சி பங்குச் சந்தை துப்பாக்கிச் சூடு, 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி - தாக்குதலை பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

கராச்சி பங்குச் சந்தை துப்பாக்கிச் சூடு, 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி - தாக்குதலை பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள பங்குச் சந்தை கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் ஒரு பொலிஸார், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தாக்குதலை நடத்திய நான்கு பேர் அடங்குவதாக, அந்நாட்டு மீட்பு சேவை தலைவர் பைசல் ஆதி அல் ஜசீரா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில், குறைந்தது இரண்டு பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை பாகிஸ்தானிலுள்ள பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் (Balochistan Liberation Army-BLA) எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தற்கொலைதாரிகள் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரிகளின் பைகளிலிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி தாங்கிய நபர்கள், கட்டடத்திற்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் கட்டடத்தைத் தாக்கியுள்ளனர். இக்கட்டடமானது, உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதுடன் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இப்பகுதியில் கொண்டுள்ளது.

தாக்குதல்தாரிகளில் இருவர் கட்டடத்தின் நுழைவாயிலில் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் உள்ளே சென்று பின்னர் அங்கேயே கொல்லப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய எடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பங்குச் சந்தையின் பணிப்பாளர் ஆபித் ஹபீப், தாக்குதல் இடம்பெற்றபோது தனது அலுவலகத்தில் இருந்துள்ளதோடு, பிரதி இராணுவ அதிகாரிகள் கட்டடத்தை முழுமையாக கையகப்படுத்தும் வரை, அவர் அங்கு மேலும் 20 ஊழியர்களுடன் இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

காலை 10.00 மணிக்கு (05:00 GMT), ஒரு கார் கட்டடத்திற்கு அருகில் வந்தது. அதிலிருந்து இறங்கிய ஆயுததாரிகள் பலாத்காரமாக கட்டடத்திற்குள் நுழைந்து சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக, அவர் தெரிவித்துள்ளார்.

"துப்பாக்கிச் சூடு நடந்தது. திடீரென்று எல்லோரும் என்ன நடக்கிறது என்று ஜன்னல்களை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு மிக அருகிலேயே இடம்பெறுவதை அறிந்த அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள், நாங்கள் கதவுகளை மூடிக் கொண்டோம்."

அந்நாட்டு ஊடகங்கள் இது தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. இடைவிடாத துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சட்ட அமுலாக்க பிரிவு குறித்த பகுதியை சோதனையிட்டு வருகின்றது.

தாக்குதல் நடந்த வேளையில் 1,000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கட்டடத்தில் இருந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment