சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் ஒரு மணி நேரத்தின் பின் திருப்பி அனுப்பப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் ஒரு மணி நேரத்தின் பின் திருப்பி அனுப்பப்பட்டார்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவு நாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு தடுத்து ழைவக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்துப் பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைக்கப்பட்ட பின்னர், அவர்களை மீண்டும் யாழ் நோக்கி திருப்பினுப்பியுள்ளனர்.
காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் தடுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “தனிமைப்படுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் முள்ளிவாய்காலுக்குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். 

இது தொடர்பாக மேலும் தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்தவாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்து பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். 

விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்து பேர் மட்டுமே வந்திருந்தனர்.

No comments:

Post a Comment