கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்பது தேர்தல் கால வெடி குண்டு - சிறிதரனுக்கு சிவசக்தி அதிரடிப் பதில் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்பது தேர்தல் கால வெடி குண்டு - சிறிதரனுக்கு சிவசக்தி அதிரடிப் பதில்

புதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சியாளர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யும் நிலைமையொன்று ஏற்படலாமென சிறிதரன் கூறியுள்ள நிலையில் உங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நெருக்கடிகள் இல்லையா? என தனியார் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு விடயங்களை கேட்டிருக்கின்றீர்கள். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யும் விடயத்திற்கு பதிலளிக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ இல்லை. இதற்கென சின்னமும் இல்லை. அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எவ்வாறு தடை செய்யமுடியும்.

நகைச்சுவை நடிகர் வடிவேல் நகைச்சுவைக்காக கிணற்றைக் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்யுமாறு கூறுவார். பதிவுகளே இல்லாத கட்டமைப்பொன்றினை தடைசெய்வதாக கூறுவது அதுபோன்றுதான் உள்ளது.

அடுத்ததாக, அவர் தமிழரசுக்கட்சிக்கு பதிலாக கூட்டமைப்பென கூறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். தமிழரசுக்கட்சியைக்கூட எந்தவொரு அடிப்படையிலும் அரசாங்கம் தடைசெய்யாது.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சமஷ்டிக் கட்சியாக தமிழரசுக்கட்சி இருந்தாலும் தாம் பிரிவினையைக் கோரமாட்டோம். சமஷ்டி பிரிவினை இல்லையென்று சத்தியக் கடதாசி உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டாகிவிட்டது.

மேலும் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்ததைப் போன்று இம்முறையும் முண்டு கொடுப்பதற்கு தயாராகி விட்டது.

ஆகவே தமக்கு ஆதரவாக, ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக உள்ள அரசியல் தரப்பினை ஆட்சியாளர்கள் தடைசெய்வார்களா? ஆகவே, இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தேர்தல் வெடிகுண்டுகளே.

அவருடைய கட்சியின் பேச்சாளர் விடுதலைப்போராட்டத்தினை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டபோது அமைதி காத்தமையால் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ச்சியாக பேசிவந்ததோடு, புலிகளின் தளபதிகளில் ஒருவரின் மைத்துணராக இருக்கும் ஒருவரே மௌனமாக இருந்துவிட்டாரே என்ற அதிருப்திகளும் மக்கள் மத்தியில் உண்டு. ஆகவே அவையனைத்தையும் திசை திருப்பவே திடீரென ராஜபக்ஷவினர் மீது சீறியிருக்கின்றனர்.

எனது கடந்தகால அவதானிப்புக்களின் அனுபவத்திலிருந்து, தேர்தல் நெருங்கும் தறுவாயில் விசாரணைக்கும் அவர் அழைக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த காலத்தில் அவ்வாறான நிகழ்வும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே சற்று ஆழமான கரிசணை செலுத்தினீர்கள் என்றால் அதன் பின்னணி உங்களுக்கும் புரியும்.

இரண்டாவதாக, எமது அரசியல் செயற்பாடுகள் நேரடியாக தடுக்கப்படாதுவிட்டாலும், இடையூறுகள் தாராளமாக ஏற்படுத்தப்படுகின்றன. புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களுக்குள்தான் எமது அனைத்து நிகழ்வுகளும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment