கொரோனா சீனாவில்தான் தோன்றியது என்பதற்கு அமெரிக்கா ஆதாரம் எதுவும் தரவில்லை - உலக சுகாதார நிறுவனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

கொரோனா சீனாவில்தான் தோன்றியது என்பதற்கு அமெரிக்கா ஆதாரம் எதுவும் தரவில்லை - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ், சீனாவில்தான் தோன்றியது என்பதற்கான ஆதாரம் எதையும் அமெரிக்கா அளிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றியதுதான் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் நம்பப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மக்கள் தொடர்பு அலுவலகம் போல உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும், கொரோனா வைரஸ் சீனாவில்தான் தோன்றியது, சீனா இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏ.பி.சி. டெலிவிஷனின் ‘தி வீக்’ நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, உகான் ஆய்வுகூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடி கால தலைவர் மைக்கேல் ரேயான் நிருபர்களிடம் கூறியதாவது.

கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் தோன்றியது என்று கூறப்படுவது எங்கள் பார்வையில் ஊகத்தின் அடிப்படையில்தான், அது அப்படியே நீடிக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி எந்த ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தையும் அமெரிக்க அரசு எங்களிடம் வழங்கவில்லை. அப்படி ஆதாரம் வழங்கினால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் இயற்கையானதுதான் என்பதற்கான ஆதாரங்களும், ஆலோசனைகளும்தான் எங்களுக்கு வந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் கொரோனா வைரஸ் உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்துதான் வந்திருக்கிறது என்று கூறுவதற்கான தரவுகள் அல்லது ஆதாரங்கள் இருந்தால், அதை பகிர்ந்து கொள்வதா, எப்போது பகிர்ந்து கொள்வது என்பதை அமெரிக்க அரசுதான் தீர்மானிக்க முடியும்.

அதே நேரத்தில் அப்படியெதுவும் இன்றி வெறுமனே, ஒரு முடிவுக்கு வருவது என்பது உலக சுகாதார நிறுவனத்துக்கு கடினமான விடயம் ஆகும். நாங்கள் சீன விஞ்ஞானிகளிடம் இருந்து தெரிந்துகொள்ள முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியும். நாம் ஒன்றாக இணைந்து பதில்களை பெற முடியும்.

ஆனால் இது தவறான செய்கையின் தீவிரமான விசாரணைக்கு உரியது என்று முன்னிறுத்தப்பட்டால் இதை கையாள்வது மிகக்கடினமானது. இது அறிவியல் விவகாரம் அல்ல. இது அரசியல் விவகாரம். அறிவியல் என்றால் அதற்கான விடையைக் காண முடியும். அந்தப் பதில்களின் தாக்கங்களை ஒரு கொள்கை மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் கையாள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad