மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை - பல இடங்களில் மண்மேடுகள் சரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை - பல இடங்களில் மண்மேடுகள் சரிவு

மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மவுசாகலை, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிகரித்து வருகிறது.

பொகவந்தலாவ, தலவாக்கலை, டயகம், நுவரெலியா உட்பட பல பகுதிகளில் கடும் காற்றுடனான வானிலையே கடந்த மூன்று நாட்களாக தொடர்கிறது.

கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

வீட்டின் கூரைகள் காற்றில் முழுமையாக அள்ளுண்டு சென்றுள்ளன. முன்பகுதி சுவரும் இடிந்து விழுந்துள்ளது. எனினும், வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.

இவ்வீட்டில் வசித்த தாய் மற்றும் மகன்மார் மூவரும் அயலவர் வீட்டில் தங்க வைக்க ப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை தோட்டநிர்வாகத்தினரும், கிராம சேவகரும் செய்து கொடுத்துள்ளனர்.

இதேவேளை, வட்டவளை, தியகல கரோலினா தோட்டத்தில் பாரிய கற்பாறையொன்று வீடொன்றின்மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெறும்போது வீட்டுக்குள் மூவர் இருந்துள்ளனர். அடை மழையால் அவர்கள் வீட்டில் அறையிலிருந்து வெளியில் சென்று விராந்தையில் உறங்கியதனால் உயிர் தப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அயலில் உள்ள வீடுகளில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்க ப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 140 மில்லிலீட்டர் மழை பெய்துள்ளமையால் மேல் கொத்மலை காசல்ரி, மவுசாகலை, கெனியன் நீர்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளன. மவுசாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் நோட்டன் விமலசுரேந்திரன் நீர்தேக்கத்தில் நீர் நிறைந்து வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நிவ்வெளிகம பகுதியில் பாரிய மரத்தோடு மண்மேடு சரிந்ததில் அவ்வீதியின் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பை வழங்க மின்சாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதுடன் பாதை அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்மேடு சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்

No comments:

Post a Comment