அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இன்று (26) மாலை பத்தரமுல்லையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து திடீரென சுகவீனமுற்ற அவர், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிக கோபால் பாக்லேவை, மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று பிற்பகல் சந்தித்திருந்தார்.

இது தொடர்பில் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இடப்பட்டுள்ளதோடு அதில், "இதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு காலமானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

1964 ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் சௌமியமூர்த்தி ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான், மரணிக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார்.

1990ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆறுமுகன் தொண்டமான், 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அதன் பின்னர் அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றதுடன் கடந்த காலங்களிலும் தற்போதும் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த அவர், பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்தார். அந்த வகையில் அவர் இறுதியாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

No comments:

Post a Comment