மக்களின் மனக் கவலையைப் போக்க பாடல் இசைக்கும் படையினர் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

மக்களின் மனக் கவலையைப் போக்க பாடல் இசைக்கும் படையினர்

கொரோனா அச்சத்தினாலும், ஊரடங்கு உத்தரவினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த படையினர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய முயற்சியொன்றை கொழும்பு பகுதியொன்றில் மேற்கொண்டனர்.

மருதானை தொடர்மாடி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக பாதுகாப்புப் பிரிவின் வாகனத்தை நிறுத்தி வைத்த படையினர், அதன் மீது நின்றவாறு இசை நிகழ்ச்சியை நடத்தியமை அங்கிருந்த அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

கொழும்பு - மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் கடந்த வியாழன் இரவு உயிரிழந்திருந்தார். இவர் தனது வீட்டில் இருந்த நிலையில் சுகவீனமுற்றிருந்ததுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இது இலங்கையில் பதிவான நான்காவது மரணமாகும்.

அத்துடன், குறித்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார தரப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்த மரணத்தை அடுத்து, குறித்த நபர் வாழ்ந்த மருதானை தொடர்மாடி குடியிருப்பொன்று அமைந்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டது.

தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும், அந்த பகுதியிலுள்ள மக்களை சுய கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையிலுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள சுமார் 700 இற்கும் அதிகமானோர் தமது வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். அந்த பகுதியிலுள்ள மக்கள் வீட்டு முற்றத்திற்கு வருவதற்கும் பாதுகாப்புப் பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதியிலுள்ள மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த படையினர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad