யாழில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

யாழில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அலுவலகர் பிரிவுகள் உள்ளன. எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகள், நபர்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் நபர்களைக் கண்டறிதல் என அத்தனை செயற்பாடுகளையும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், மூத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

எனவே பிரதேச மட்டத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அலுவலகர் பிரிவுகளில் உள்ள அலுவலர்களும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உள்ள சில அதிகாரிகளும் பிராந்திய மருந்து வழங்கல் அலுவலகத்தின் பணியாளர்களும் இன்று மட்டும் தொடர்ச்சியாகப் பணியாற்றுகின்றனர். 

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்திலிருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். 

எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது. அதனையடுத்து தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் மார்ச் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளமையை உறுதிப்படுத்தி மார்ச் 22ஆம் திகதி எமக்கு அறிக்கை கிடைத்தது. 

எனினும் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற அறிக்கை 22ஆம் திகதி கிடைப்பதற்கு முன்னதாகவே அவருடன் நேரடியாகவும் சந்தர்ப்பசூழல் அடிப்படையிலும் தொடர்பு ஏற்பட்ட சுமார் 200 பேரை நாம் அடையாளப்படுத்திவிட்டோம். அதனால் அவர்களைப் பாதுகாப்பாக நாம் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திவிட்டோம். 

இந்த விடயத்தில் சுகாதார மருத்துவ அதிகாரிகளினதும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினதும் பெரும் பங்களிப்பு உண்டு. அவர்கள் இதனை நேரடியாகச் சென்று செய்திருந்தனர். சுயதனிமைப்படுத்தலை எம்மால் ஒழுங்கமைக்கப்பட்டாலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பக்கபலமாக இருந்தனர். தற்போதும் இராணுவத்தினர் அந்தப் பணியை முன்னெடுக்கின்றனர். 

இவ்வாறு எம்மால் விரைந்து செயற்பட முடிந்தமையால்தான் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடிந்தது. மேலும் போதகருடன் நெருங்கமாகப் பழகிய 20 பேரை பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைத்தோம். 

அவர்களது கண்காணிப்புக் காலம் 2 வாரங்களில் நிறைவடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதியளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அவர்களைப் பரிசோதனைக்குட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் பரிசோதனையின் படி 20 பேரில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

தாவடியில் 163 குடும்பங்கள், மானிப்பாயில் 70 குடும்பங்கள், ஆனைக்கோட்டையில் 40 குடும்பங்கள், நாவந்துறையில் 3 குடும்பங்கள், அரியாலையில் 20 குடும்பங்கள், பூம்புகாரில் 25 குடும்பங்கள், தெல்லிப்பளையில் ஒரு குடும்பம், கோப்பாயில் 18 குடும்பங்கள் மற்றும் பருத்தித்துறையில் 18 குடும்பங்களை வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளோம். 

இவற்றில் தாவடி, அரியாலை, நாவந்துறை மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 50 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் எமக்குக் கிடைத்த 42 பேரின் அறிக்கைகளும் தொற்று இல்லை எனக் கிடைத்துள்ளன. 

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக்கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. ஏனென்றால் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் விடுவிப்பதற்கு தயாரான நிலையில் நல்ல உடல்நிலையோடு இருந்தார்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தலில் உள்ள ஒருவரை ஒரு தடவை பரிசோதனைக்குட்படுத்தும் போது தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துவிட்டால் எம்மால் முடிவு எடுக்க முடியாது. அவரை இரண்டு அல்லது மூன்று முறை பரிசோதனைக்குட்படுத்தும் போதுதான சரியான முடிவுக்கு நாம் வர முடியும். 

தற்போது 50 பேரின் மாதிரிகளே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 319 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad