இன்றிரவு ஒன்பது மணிக்கு இந்தியா எங்கும் மின் விளக்குகள் அணைப்பு - வீடுகள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றி வைப்பு - கொரோனாவை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

இன்றிரவு ஒன்பது மணிக்கு இந்தியா எங்கும் மின் விளக்குகள் அணைப்பு - வீடுகள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றி வைப்பு - கொரோனாவை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதை வெளிப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் இன்று (ஏப்ரல் 5) இரவு ஒன்பது மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 

இன்று இரவு ஒன்பது மணி தொடக்கம் ஒன்பது நிமிடங்களுக்கு மின் விளக்கை அணைத்து வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு (9 நிமிடங்களுக்கு மட்டும்) விளக்குகளை அணைத்து விடுங்கள், வீட்டின் 4 மூலைகளிலும் அகல் விளக்கு அல்லது டோர்ச் விளக்கு அல்லது கையடக்கத் தொலைபேசி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவோம்" என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியர்களின் ஒற்றுமையை பறைசாற்றம் வகையில் பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்லி உள்ளார். ஆனால் அவர் எந்த நோக்கத்திற்காக இதைச் சொன்னாரோ அது வேறு மாதிரியாக திரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

விளக்கேற்றினால் கொரோனா செத்து விடுமா? இருட்டில் கொரோனா ஓடி விடுமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே விளக்கேற்றினால் கொரோனாவை கொல்லலாம் என்று பிரதமர் சொல்லவே இல்லை. ஆனால் அப்படி சொன்னது போலவே கருத்துகள் உலா வருகின்றன.

இதில் உச்சக்கட்டமாக சில "விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்றினால் வெப்பம் அதிகரிக்கும். இதனை ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவரே சொல்லியுள்ளார்" என்ற தகவலும் பரபரப்பட்டு வருகின்றது. 

கொரோனா வைரஸ்கள் வெப்பநிலையில் உயிர் வாழாது. 130 மெழுகுவர்த்திகள் ஒன்றாக எரிந்தால், வெப்பநிலை 9 வீழ்ச்சியால் அதிகரிக்கும் என்று ஐ.ஐ.டி பேராசிரியர் சொல்கிறார், அதனால் கொரோனா ஞாயிற்றுக்கிழமை இரவு 9.09 மணிக்கு இறந்து விடும்" என்ற தகவலும் கிளப்பப்பட்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் அப்பட்டமான பொய் வதந்தி ஆகும்.

விளக்கு ஏற்றும் விடயத்தில் சிதம்பரமும் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

"டியர் மோடி... நாங்கள் 5-ம் திகதி விளக்கு ஏற்றுகிறோம். ஆனால் பதிலுக்கு நாங்கள் சொல்வதையும், பொருளாதார வல்லுனர்கள் சொல்கிற புத்திசாலித்தனமான ஆலோசனைகளையும் நீங்கள் கேட்க வேண்டும். நாட்டில் உள்ள பொருளாதாரக் குழப்பங்களுக்கும், வேதனைகளுக்கும் தீர்வு காணுங்கள். ஆறுதலும் நம்பிக்கையும் தரும் எந்த அறிவிப்பும் வரவில்லையே?" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது இவ்விதமிருக்க, இந்தியாவில் நேற்று பிற்பகல் வரையான 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,087 ஆக உயர்ந்திருக்கிறது. 80 இற்கு மேல் உயிரிழந்துள்ளனர். 183 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு நேற்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்ந மாநிலத்தில் மட்டும் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு மருத்துவமனை, பொலிஸ் நிலையங்கள் தெருக்களில் விளக்குகளை அணைக்கத் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். அம்மாநிலத்தில் நேற்று வரை மொத்த உயிரிழப்பு 3ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் 52 வயது தலைமை ஆசிரியர் நேற்று பலியானார். முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த இவர் டில்லி தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 வயது இளைஞர் பலியானார். இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. 191 பேரில் 41 பேர் டில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோர் ஆவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, உணவை ரோபோக்கள் அளிக்கும். ரோபோக்களை தாதியர்கள் இயக்குவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கேரளாவின் கோட்டயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் தோமஸ், 88 வயது திரேஸியம்மா ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதேசமயம் ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கை நீடிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீடிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. 

இதுஒருபுறமிருக்க மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலித்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள 21 நாள் ஊரடங்கு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மக்கள் ஊரடங்கின் போது கைகளை தட்டுமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கொரோனா விவகாரத்தில் மோடியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். 'ஊரடங்கை எதிர்ப்பவர்கள் அடுத்தஇ 21 நாட்களுக்கு அமைதி காப்பது நலம்' என அவர் கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment