பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் - போதைப் பொருள் கடத்தினரா என சந்தேகம் ? - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் - போதைப் பொருள் கடத்தினரா என சந்தேகம் ?

(எம்.எப்.எம்.பஸீர்) 

மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவில், வீதி சோதனை சாவடியில் பிறப்பிக்கப்பட்ட சமிக்ஞை உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படு காயமடைந்துள்ளனர். மற்றொருவர் தப்பிச் சென்ற நிலையில் எகொட உயன பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். 

இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு 10.20 மணியளவில் எகொட உயன, முகத்துவார புதிய பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கடவை சோதனை சாவடியில் பதிவானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் குறித்த கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகே வைத்து கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மூவர் அப்போதும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, இந்த காரானது மொறட்டுவை பகுதியிலிருந்து பாணந்துறை நோக்கி நால்வருடன் பயணித்துள்ளது. 

காரை நிறுத்துமாறு எகொடஉயன பழைய வீதியில் உள்ள சோதனைச் சாவடி வீதித்தடையில் வைத்து பொலிஸார் முதலில் உத்தரவிட்டுள்ளனர். எனினும் அந்த சமிக்ஞை உத்தரவை மீறி கார் பயணித்துள்ளது. 

இதனையடுத்து குறித்த கார் தொடர்பில் பொலிஸார் எகொடஉயன, முகத்துவார புதிய பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கடவை சோதனை சாவடிக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அங்கு குறித்த காரை நிறுத்துவதற்கு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். அதனையும் மீறி செல்ல அந்த கார் முயற்சித்த போதே அந்த சோதனை சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாரால் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட பின்னரும் குறித்த கார் பாணந்துறை பகுதியை நோக்கி பயணித்துள்ளது. இதனையடுத்து கார் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸ் சோதனை சாவடிக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அக்கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காரில் 4 பேர் பயணித்துள்ளதுடன், காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஒருவரே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார். 

காயமடைந்த மூவரும் 18,20,22 வயதுகளை உடைய பாணந்துறை, பத்தரமுல்லை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். காயமடைந்தவர்கள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் காரில் இருந்த 4 ஆவது நபர் காயமடையாமல் தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸாரால் பின்னர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் 20 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த நபராவார். அவரை நேற்று மொரட்டுவை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது இம்மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் எகொட உயன பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளில், குறித்த கார் சோதனை சாவடிகளில் சமிக்ஞைகளை மீரி பயணிக்க போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை காரணமா என விஷேட அவதானம் செலுத்தியுள்ளனர். 

ஏனெனில் காயமடைந்த சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த 2018 நவம்பர் மாதம் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவராவார். 

மற்றொருவர், 2017 ஏப்ரல் மாதம் நீதிமன்ற பிடியாணை ஒன்றுக்காகவும், 2018 ஜூலை ஹெரோயின் கடத்தல் தொடர்பிலும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் தாக்குதல் சம்பவம் ஒன்று குறித்தும், 2019 ஏப்ரல் மாதம் ஹேரோயின் உடன் வைத்திருந்தமை தொடர்பிலும் கைது செய்யப்பட்டவராவார். 

இந்நிலையிலேயே இது குறித்து சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment