குருணாகல் வைத்தியசாலை தீ விபத்துக்கான காரணம் வெளியாகியது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

குருணாகல் வைத்தியசாலை தீ விபத்துக்கான காரணம் வெளியாகியது

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் TCL எனும் இராசாயனப் பொருள் என தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருணாகல் போதானா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று (05) 11.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதன்போது, குருணாகல் பொலிஸார், குருணாகல் நகர சபை தீயணைப்புப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதில் சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின்போது, குறித்த மருந்துக் களஞ்சியத்தில் பணி புரியும் சுகாதார உதவியாளர் ஒருவர், அதிக செறிவு கொண்ட கிருமி நாசினியான TCL எனும் இராயனப் பொருள் கொண்ட 04 கொள்கலன்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில், குறித்த கொள்கலனிலிருந்து திடீரென தீ ஏற்பட்டுள்ளது.

இதன்போது, தீயை அணைப்பதற்காக நீரை ஊற்றியதைத் தொடர்ந்து நீருடன் இரசாயனப் பொருள் தாக்கமுற்று தீ பாரிய அளவில் பரவியுள்ளது.

இதன் காரணமாக, கீழ் தளத்திலுள்ள 03 அறைகள் மற்றும் அதனை அண்டிய நடைபாதையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளைக் கொண்ட பெட்டிகள் தீயினால் அழிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கட்டடம் 04 மாடிகளைக் கொண்டுள்ளதுடன், முதலாவது மாடிக்கு தீ பரவாது தடுக்கப்பட்டுள்ளதுடன், கீழ்த் தளத்தில் இருந்த அதிகளவான மருந்துகள் தீக்கிரையாகாது தடுப்பதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் இணைந்து செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த நான்கு மருத்துவமனை ஊழியர்கள் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தீவிபத்து காரணமாக எவ்வித உயிராபத்துகளோ, காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரம் தொடர்பிலான மதிப்பீடுகள் மற்றும் மேலதிக விசாரணைகள் தொடர்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதோடு, குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment