எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் - அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் - அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்

அமெரிக்க படைகள் எங்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்கபதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

உலகமே தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. 

அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க கடற்படையினர் ஈரானை ஒட்டிய பாரசீக வளைகுடா கடற்பகுதியில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை கடந்த 15ம் திகதி ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர். 

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டன. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க நாட்டின் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய அனைத்து ஈரானிய படகுகளையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் கப்பல்கள், ஆயுதம் தாங்கிய படகுகள் மீது அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தினால் அதற்கு விரைவாகவும், ஆக்ரோஷமாகாவும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி ஜெனரல் ஹாசீன் சலமீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈரான் நாட்டுக்கு சொந்தமான கப்பல்களையும், போர் படகுகளையும் அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அமெரிக்க கப்பல்களையும் தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சலமீ தெரிவித்துள்ளார். 

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்குவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின் ஒரு அங்கமாக செயல்படும் புரட்சிகர பாதுகாப்பு படையினர் அந்நாட்டின் இஸ்லாமிய நடைமுறைகளை பாதுகாக்கவும், வெளிநாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துதல், ஈரானின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுகளின் தலையீடுகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு ராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment