ஜனாதிபதி, பிரதமர், சபாநயாகர் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆராய்ந்து பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம் எடுக்க வேண்டும் - கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

ஜனாதிபதி, பிரதமர், சபாநயாகர் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆராய்ந்து பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம் எடுக்க வேண்டும் - கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

(ஆர்.யசி) 

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கட்டுப்படுத்த நீண்ட கால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதுவரையில் நாட்டில் பாராளுமன்றம், அரசாங்கம் இரண்டும் இல்லாது செயற்பட முடியாது, ஆகவே காபந்து அரசாங்கம் களையும் முன்னர் பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவரும் கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

நாட்டின் அவரசகால நிலைமை குறித்து ஆராயும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இன்று நான்கு மணி நேரம் இந்த கூட்டம் இடம்பெற்ற நிலையில் மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எந்த தீர்மானங்களையும் முன்னெடுக்க முடியாதெனவும் பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க சிறந்த வழிமுறையாக அமையும் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 
இன்றைய கூட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்களும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். 

ஆரம்பத்தில் அரச அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் தரப்பினர் தற்போது வரையில் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்திய அரச அதிகாரிகள் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறான மாற்று வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில் நாளாந்த வேலையாட்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், குறிப்பாக வடக்கு கிழக்கில் கூலி வேலை செய்யும் எமது மக்கள் எந்தவித நிவாரண உதவிகளும் இல்லாது வீடுகளில் முடங்கிக்கிடக்க நேர்ந்துள்ள என்ற காரணிகளை எடுத்துரைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் பொதுமக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுக்க எந்தவித மாற்று வேலைதிட்டங்களையும் அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 
ஆகவே தினக்கூலி வேலைகளில் ஈடுபடும் மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போது கூறுகையில், தற்போது மக்களுக்கான உதவி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தெற்கில் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூறியுள்ளார். அது குறித்த அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் பிரதேச சபைகள் இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது. ஏனென்னில் இந்த விடயத்தில் ஆளுநரின் அனுமதி வழங்கப்படாத நிலையே உள்ளது. இடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு கிழக்குக்கும் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் உள்ளன. 
ஏனைய மாகாணங்களுக்கு கிடைக்கும் நிவாரணம் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கவில்லை. பிரதேச சபைகள் மூலமாக வழங்கப்படும் நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில் அதற்காக என பிரதேச சபைகளில் உள்ள நிதியைப் பயன்படுத்த ஆளுநர்களின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால். வடக்கு கிழக்கில் அதற்கான அனுமதி ஆளுநர்களால் வழங்கப்படவில்லை. இடர் நிவாரண நிதி என பிரதேச சபைகளுக்கு உள்ளது. அதனைப் பயன்படுத்துவதற்கு ஆளுநர்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் நுகர்வுக்கான போதியளவு உணவுப் பொருட்கள் போய்ச் சேரவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இந்த நிலை நீண்ட காலத்துக்குத் தொடருமானால் அதுவரையில் எனது மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருக்க வேண்டிவரும். அவ்வாறு இருந்தால் பசி பட்டினியில் எமது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகும். 

இந்த தொற்று நோய் பரவல் நிலைமைகளை கட்டுப்படுத்த நீண்ட கால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென சுகாதார துறையினர் கூறுகின்றனர். நீண்ட காலம் எடுக்குமானால் அதுவரையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தால் நாட்டின் நிலைமையும், மக்களின் நிலைமையும் என்னவாகும். மக்கள் உண்பதற்கு உணவுகள் அவசியம், மருந்துவ பொருட்கள் அவசியம். ஆகவே உற்பத்தியாளர்கள் தொழில் செய்ய வேண்டும். ஆகவே இந்த விடயத்தில் மாற்று வேலைத்திட்டம் கையாளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 
அதேபோல் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் திணைக்களத்தின் நிலைப்பாடாகும். அப்படியானால், ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள நிலையில் அதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. 

அதேபோல் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் காபந்து அரசாங்கம் செயற்பட முடியாது. மூன்று மாத காலத்திற்கே காபந்து அரசாங்கம் இயங்க முடியும். ஆகவே இப்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக மேலும் ஆறு மாத காலம் தேர்தலும் இல்லாது நாட்டில் பாராளுமன்றமும் இல்லாது, அரசாங்கம் ஒன்றும் இல்லாது செயற்பட முடியாது. 

மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசி தீர்மானம் எடுக்க முடியாது. மக்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றியாக வேண்டும், அவசரகால நிலைமையை கையாளும் உடனடி தீர்மானங்களை எடுத்தாக வேண்டும். அதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற காரணிகளை முன்வைத்துள்ளார். 
எனினும் சுமந்திரன் முன்வைத்த கருத்துகள் தொடர்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் விஜயதாச ராஜபக்ஷ, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். பாராளுமன்றம் கூட்டப்படுவது அவசியமற்ற விடயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில், பாராளுமன்றம் கூட்டப்படுவது, அவசரகால சட்டங்களை கொண்டுவருவது குறித்து பேசும் இடம் இதுவல்ல, ஜனாதிபது, பிரதமர், சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கூடி இதற்கான தீர்மானம் ஒன்றினை எடுப்போம் என கூறியுள்ளார். 

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் கூறுகையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களை பாதுகாக்க விசேட வேளையில் ஈடுபட்டு வருகின்ற அரச மருத்துவ துறையினர், பாதுகாப்பு, பொலிஸ் தரப்பினர், சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஊழியர்கள் என அனைவரையும் இணைத்துக்கொண்டுள்ள போதிலும் கூட அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்தவித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
ஆகவே அவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணிகளை முன்வைத்துள்ளார். 

அதேபோல் மக்களின் பிரதான பிரச்சினையாக தமக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. நகர் புறங்களில் ஓரளவேனும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட கிராமங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 

ஆகவே கிராமங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க குறைந்த பட்சம் ஒரு இலத்திரனியல் மருத்துவ சேவையை ஆரம்பிக்க வேண்டும். வாரத்திருக்கு ஒரு தடவையேனும் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமாக அமைந்தால் மக்களுக்கு பாதுகாப்பாக அது அமையும் என்ற காரணிகளையும் கூறியுள்ளார். 

அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற காரணிகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

No comments:

Post a Comment