கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை - சுசில் பிரேமஜயந்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 28, 2020

கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை - சுசில் பிரேமஜயந்த

அரசமைப்புக்கு இணங்க, கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்க்கட்சியை சேர்ந்த சில கட்சித் தலைவர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக நாடாளுமன்றை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இதில் அரசமைப்பின் 70 ஆவது உறுப்புரிமையின் 7 ஆவது சரத்துக்கு இணங்க, கலைக்கப்பட்ட நாடாளுமன்றமொன்றை மீண்டும் கூட்டும் அதிகாரம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஆனால், அந்தச் சரத்துக்கு அமைய ஜனாதிபதியால் நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்றால், 155 ஆவது உறுப்புரிமையின் 2ஆவது சரத்துக்கமைய, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசேட சட்டமொன்று தற்போது கொண்டு வரப்படவில்லை.

நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படவும் இல்லை. அத்தோடு, யுத்த காலத்தின்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீண்டும் கூட்டுவதற்குத்தான் அவசரகாலச் சட்டத்தை அமுல் படுத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஊரங்குச் சட்டமும், சுகாதார தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 70 ஆவது உறுப்புரிமையின் 7 ஆவது சரத்தை இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

155 ஆவது உறுப்புரிமையின் 3 ஆவதுசரத்துக்கமைய, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு அரச சேவைகளை நிர்வகிக்க நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சிலர், அரசமைப்பு தொடர்பாக போதிய தெளிவில்லாத காரணத்தினால் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். நாம் அரசமைப்புக்கு இணங்கவே இந்த விடயத்தில் செயற்பட முடியும். எனவே, யாரும் இதில் குழப்பமடையத் தேவையில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad