நெருக்கடியான நிலைமையை பொதுமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - அரசாங்க தகவல் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

நெருக்கடியான நிலைமையை பொதுமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - அரசாங்க தகவல் திணைக்களம்

(எம்.மனோசித்ரா) 

மக்கள் ஒன்று கூடலை தவிர்க்கும் நோக்கத்திலேயே அரசாங்கத்தினால் வீட்டிலிருந்து வேலை செய்யும் காலம் பிரகடனப்படுத்தப்படுத்தல், கிராம மட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் மூலம் நேரடியாக வீடுகளுக்கே அரச சேவைகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நெருக்கடியான நிலைமையை பொதுமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கழுவேவா கோரிக்கை விடுத்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இந்நிலையில் மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய சில மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படுகிறது. 

இந்த சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சு, முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட ஏனைய கிராம மட்டத்திலுள்ள திணைக்களங்கள் என்பன அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன. இதேபோன்று அரச திணைக்களங்களும் இடையறாது தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். 

இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மாத்திரம் அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் நிவாரண பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தின் கீழ் முதியோருக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று விவசாயிகளுக்கான கொடுப்பனவு மற்றும் ஓய்வுதியம் என்பன தபால் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனேயே இவ்வனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 40 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. 

மக்கள் ஒன்று கூடுவதை முற்றாக தவிர்ப்பதற்காக அவர்களுக்கான சேவைகளை வீடுகளில் நேரடியாக வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். கிராம மட்டத்திலுள்ள அதிகாரிகள் மூலம் வீடுகளில் நேரடியாக அரச சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே இந்த நெருக்கடியான நிலைமையை பொதுமக்கள் புரிந்து செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment