ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதற்கான தருணம் இதுவல்ல, ஒருமித்து செயற்படுங்கள் - சர்வதேச நாடுகளிடம் சஜித் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதற்கான தருணம் இதுவல்ல, ஒருமித்து செயற்படுங்கள் - சர்வதேச நாடுகளிடம் சஜித் வேண்டுகோள்

(நா.தனுஜா) 

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கோ அல்லது ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதற்கோ பொருத்தமான தருணம் இதுவல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் ஒருமித்து செயற்படுவதுடன் அறிவு, திறன், நுட்பம் அனைத்தையும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

நாடு கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலால் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றின் கேள்விகளுக்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளித்திருக்கிறார். 

அதில் அவரால் மேலும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு, கொரோனா வைரஸ் தொடர்பில் நன்கு புரிந்துகொள்ளக் கூடிய விளக்கங்கள், சரியான வழிகாட்டல்களை உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு ஆசிய நாடுகள் அவதானம் செலுத்த வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்களை வழங்க வேண்டும். 

மேலும் எமக்கு அதிக எண்ணிக்கையான சுவாசக்கருவிகள் (Ventilators) தேவைப்படுகின்றன. பெருமளவான தொற்று நோயாளர்களைப் பராமரிக்க தகுந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு முன்கூட்டியே தயார்நிலையில் இருக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. 

எனவே தற்போதைய சூழ்நிலையில் எமக்கான ஆலோசனைகளை வழங்குவதுடன், இயலுமான நிதி மற்றும் சுகாதார உபகரணங்களையும் வழங்குவதனூடாக உலக சுகாதார ஸ்தாபனம் முக்கியதொரு பணியையாற்ற முடியும். 

அடுத்ததாக ஒரு நாடு என்ற வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கோ அல்லது ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டுவதற்கோ பொருத்தமான தருணம் இதுவல்ல என்றே நம்புகின்றோம். 

எம்முடைய அறிவு, திறன், நுட்பம் அனைத்தும் முழு உலகையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கே தற்போது உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி, தற்போதைய மிகப்பெரிய சவாலான இந்த தொற்று நோயை மறந்துவிடக்கூடாது. 

இந்தத் தொற்று நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட சில தகவல்கள், தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் வலுவற்றவையாகக் காணப்பட்டன என்பது உண்மை. 

இத்தகையதொரு சர்வதேச கட்டமைப்பு உயர் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். அவை வருங்காலத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால் தற்போது அதனை விடவும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment