ஆளுநரின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளோர் வீடுகளுக்கு செல்ல சிறப்பு வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

ஆளுநரின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளோர் வீடுகளுக்கு செல்ல சிறப்பு வேலைத்திட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து தலை நகர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முக்கிய நகரங்களில் தொழில் நிமித்தம் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளைச் சேர்ந்தோரை மீள அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கீழ் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள், விஷேட வைத்திய நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்புடன் ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு வருவதாகவும், சுகாதார மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய மிக விரைவில் அது குறித்து சிறப்புத் வேலைத்திட்டம் அமுல் செய்யப்படும் எனவும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். 

வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வந்து தொழில் நிமித்தம் தங்கியுள்ளோரில் பெரும்பாலனவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது இம்மாவட்டங்கள் உட்பட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடர்கின்றது. 

அத்துடன் மேல் மாகாணத்திலேயே கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேல் மாகாணத்தில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளோர் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், உணவு உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். வேறு மாவட்டங்களில் அவர்களது உறவினர்களும் அச்சத்தில் உள்ளனர். 

இந்த பின்னணியில் இவ்விடயம் மேல் மாகாண ஆளுநர், முன்னாள் விமானப்படை தளபதியான விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலகவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்கமைய உரிய நடைமுறையூடாக இவர்கள் விரைவில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே சிறப்பு வேலைத் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment