கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் : அனந்தி சசிதரன் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் : அனந்தி சசிதரன்

இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. 

இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. நோயாளர்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத இச்சூழலில் இவ்வதிகரிப்பு என்பது மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது இயல்பானதே. 

மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாக நீண்டு செல்லும் ஊரடங்குச் சட்டம் மூலமாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக இருப்பதும் இந்நோய்த் தாக்கத்திற்கு ஓர் காரணமாக இருக்கலாம். 

இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் மக்களின் உணவுத் தேவைகளை அரசின் திட்டமிட்ட பொறிமுறைகள் மூலமாகவே பூர்த்திசெய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொது அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்களுக்கு பணி புரிவதைக் காணமுடிகிறது. மேலும் பொது வெளியில் மக்களை சந்தித்து உதவுவது மேலும் நோய் பரவக் காரணமாக அமைந்துவிடும். ஊரடங்கு வேளையில் தன்னார்வலர்களும் உதவுவது சவாலானவிடயமே. 

பொலிஸ் ஊரடங்கை இராணுவத்தினை வைத்து நடைமுறைப்படுத்தும் அரசும் அதன் திணைக்களங்களும் மாவட்ட உணவு சேமிப்பு தளத்திலிருந்தோ அல்லது வேறெங்கிருந்தோ உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். அரசின் பேரிடர் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உணவு வழங்கல் அமைச்சு, என்பன துரிதமாக பணியில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் இன்றுவரை இவர்கள் தமிழர் பிரதேசங்களில் மனித நேயப் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை. 

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகையான ரூபா 10000 கூட சரிவர வழங்கப்படவில்லை. இதில் 5000 ரூபாவிற்கு உணவுப் பொருட்களும் 5000 ரூபா பணமாகவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் சமுர்த்தி கடன் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இந்த கடன் இல்லை ன்பதுடன் ஏற்கனவே ரூபா 10000 சமுர்த்தி சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக பேசப்படுகிறது. பல சமுர்த்தி அலுவலர்கள் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை. 

ஒரு பிரதேசத்தில் 1500 ரூபா பொருட்கள் வழங்கப்படுகிறது. வேறோர் பிரதேசத்தில் 452 ரூபா பெறுமதியான 2.5 கிலோ அரிசி, 1.5 கிலோ மா, 600 கிராம் சீனி என்பவையே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கட்டுப்பாட்டுவிலையை விட அதிகவிலைக்கே பெறுமதியிடப்பட்டுள்ளது. அதுவும் பொது இடங்களில் கூட்டமாக மக்களை வரவைத்தே வழங்கப்படுகிறது. மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ இதனைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. 

மேற்கு நாடுகள் வீட்டிற்கு சென்று உணவுப் பொதிகளை வழங்குகிறது அத்துடன் மாதாந்த வருமானத்தில் குறிப்பிட்ட வீததொகையை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் இதேநிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம். 

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை அரிசி உற்பத்தி கூட போதியளவு இல்லை. வன்னிக்கான பாதைகள் பூட்டப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ள இச்சூழலில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்கள் பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இப்பிரதேசங்களை விசேட கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொரோனா அச்சுறுத்தல் சீனாவில் ஆரம்பித்த பின் விமல் வீரவன்சவின் மகளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதில் முனைப்புக்காட்டிய அரசு சீனர்களை இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல அனுமதித்தது. உலகளவில் வேகமாக இந்நோய் பரவியபோதும்கூட விமானப் போக்குவரத்தை உடனடியாக தடை செய்யத் தவறியது. 

உலக சூழல் இவ்வாறு இருக்கும்போது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு திகதி குறித்து வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்றது. அவசர அவசரமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓர் சிவில் நிர்வாகம் ஊடாக இராணுவ கட்டமைப்பைக் கொண்டு ஆட்சியை நடாத்துகிறது அரசு. 

அத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டபின் வேட்பாளர்கள் மக்களின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடமுடியாதென இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. இது யாழ் மாவட்டத்தில் மக்கள் மிகமோசமான பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

அமைச்சரவை இருந்தும் இதுவரை கடும் ஊரடங்கில் சிக்குண்டு வீடுகளில் முடக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அரச உதவிகளும் சரிவர சென்றடையவில்லை. சிங்கள கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி விளம்பரம் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பதாகைகளுடன் மக்களின் அத்தியாவசியப் பணி என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல் என்னும் ஈனச்செயலில் ஈடுபடுகின்றார்கள். 

தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் கூட ஈடுபடமுடியாமல் முடக்கப்படுகிறார்கள். மலையக மக்களைப் பொறுத்தவரை ஊரடங்கு வேளைகளிலும் வேலை செய்யுமாறு தோட்ட முதலாளிகளால் வற்புறுத்தப்படுகின்றார்கள். அரசின் எவ்வித உதவிகளும் அவர்களை சென்றடையவில்லை. 

முழு நாட்டிற்கும் ஜனாதிபதியாக உள்ள ஒருவர் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலைக் குற்றம் புரிந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை விடுதலை செய்வதையும் சிங்கள தமிழ் வேறுபாட்டு மனநிலையில் உதவிகள் வழங்குவதையும் நிறுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா வைரசிலிருந்தும் பட்டிணிச் சாவிலிருந்தும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மக்களாகிய நாமும் அனாவசியமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் விழிப்போடிருந்து கொரோனாவை விரட்டுவோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment