பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும், மக்கள் உணவு தேடி அலையும் சூழ்நிலை ஏற்படுத்தக் கூடாது - சுரேஸ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும், மக்கள் உணவு தேடி அலையும் சூழ்நிலை ஏற்படுத்தக் கூடாது - சுரேஸ் பிரேமச்சந்திரன்

கொரோனா வைரஸ் தாக்கத்தாலும் ஊரடங்கு நடைமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பொறிமுறையொன்றை வகுத்துக் கொள்வதற்கும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை சட்ட ரீதியாக எடுப்பதற்கும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டியது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் ஆளுந்தரப்பினர் அக்கறை கொண்டிராவிட்டாலும் இன்றிருக்கக் கூடிய நிலைமையில் பாராளுமனறத்தைக் கூட்டுவதனூடாகவே பல்வேறு விடயங்களுக்கும் சரியானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் அதேபோல புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்பதும் ஏற்கனவே ஒரு அரசியல் சாசனத்திற்கிணங்க அறிவிக்கப்பட்ட விடயங்களாக இருக்கின்றது. 

அதன் பிரகாரம் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடந்திருக்க வேண்டும். மே மாதம் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் உலகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கொரோனோ வைரஸ் பிரச்சினை என்பது இலங்கையையும் பாதித்திருக்கிறதென்பதால் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்திருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்.

இந்த நிலையில் எப்பொது கொரோனோ வைரஸ் பிரச்சினை என்பது தீரும் மக்கள் எப்போது சுமூகமான நிலைமைக்கு வருவார்கள் என்பது யாருக்குமே தெரியாத நிலைமை இருக்கின்றது. இலங்கையின் பல பகுதிகளும் தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டத்திற்குள் இருக்கின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிக நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டத்திற்குள் நாங்கள் இருக்கின்றோம். அதனால் எந்தவொரு விடயத்தையும் செய்ய முடியாத சூழ்நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.

ஆகவே பாராளுமன்றத்தைக் கூட்டி அந்த மக்களுக்கான நிவாரணங்களை உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பசி பஞ்சத்தால் மக்கள் உணவு தேடி அலையும் ஒரு சூழ்நிலை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment