சமூக வலையத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்ப வேண்டாம், கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

சமூக வலையத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்ப வேண்டாம், கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

கொரோனா வைரஸ் காரணமாக முழு நாட்டையும் மூடி விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவ்வாறு வதந்திகளை பரப்பும் இணையத்தளம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏப்ரல் 10 ஆம் திகதிமுதல் 15 ஆம் திகதி வரை இலங்கையை முற்றாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இக்காலப்பகுதியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய பொருட்கள் பரிமாற்றம், ஏனைய பரிமாற்றங்களை மேற்கொள்ளல், பேக்கிரி உற்பத்திகள் உட்பட எந்தவொரு பரிமாற்றமும் இடம்பெறாதெனவும் கடைகளைத் திறக்க முடியாதெனவும் சமூக வலையத்தளங்களில் நேற்று போலியான செய்தியொன்று பரப்பப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அரசாங்கத்தால் அவ்வாறு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

சமூக வலையத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்ப வேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு போலியான செய்திகளை சமூக வலையத்தளங்களில் பரப்பி வரும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறான செய்திகளை பரப்புவர்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முழுமையாக மூடப்போவதாகவும் அத்துடன் மேற்படி வைரஸ் தொற்று காரணமாக மரணம் அடைந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைமை தொடர்பிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சில குரல் பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய பொய் பிரசாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராகு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் விஷேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான சகல அறிவித்தல்களையும் ஜனாதிபதி செயலகமே வெளியிட்டு வருகிறது.

சுகாதார அமைச்சு, தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, இராணுவம் மற்றும் பொலீஸ் தலைமையகங்கள் மூலம் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனை தவிர்ந்த வேறு இடங்களில் இருந்து எந்த ஒரு அறிவித்தலும் வெளியிடப்படுவதில்லை.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. குழப்பம் அடையவும் அவசியமில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட 1,24,65 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் அவ்வாறான 1,500 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து நூறுக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக தற்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள பேருவளை அளுத்கம அக்குரணை ஆகிய பிரதேசங்களில் உள் வீதிகள் மற்றும் சிறு ஒழுங்கைகளில் மக்கள் நடமாடினால் அவர்கள் கைது செய்யப்படுவர் அவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது. அத்துடன் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். 

அதேவேளை அதிகமான கொரோனா நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன் அப்பகுதியிலேயே அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிணங்க கம்பஹா பிரதேசத்தில் 871 பேரும் அனுராதபுர பிரதேசத்தில் 645 பேரும் மிக பிரதேசத்தில் 619 பேரும் களனி பிரதேசத்தில் 520 பேரும் புத்தளம் பிரதேசத்தில் 493 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அப்பிரதேசங்களில் கடுமையான சட்டம் பிரயோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment