மக்களின் கருத்துச் சுதந்திரம் பேணப்படுவது குறித்து பதில் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

மக்களின் கருத்துச் சுதந்திரம் பேணப்படுவது குறித்து பதில் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

(நா.தனுஜா) 

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை ஜனநாயக நாடொன்றில் அவசரகால நிலையாக இருப்பினும் கூட உரிய சட்டவரை முறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்தியிருக்கிறது. 

ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தபடுவது குறித்தும், இவ்விடயத்தில் சட்ட ரீதியான சமநிலையொன்று பேணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தீபிகா உடுகம கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார். 

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் குறித்து எடுக்கபடவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. 

அதனடிப்படையில் அண்மைக் காலமாக இடம்பெறும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடந்த முதலாம் திகதி பொலிஸ் தலைமையகத்தினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இத்தகைய கைது சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதை அவதானிக்கின்றோம். 

இந்நிலையில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை ஜனநாயக நாடொன்றில் அவசரகால நிலையாக இருப்பினும் கூட உரிய சட்ட வரைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். 

No comments:

Post a Comment