மத்துகம, அக்குரஸ்ஸ பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

மத்துகம, அக்குரஸ்ஸ பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை !

(எம்.எப்.எம்.பஸீர்) 

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

14 நாள் தனிமைபப்டுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 ஆம் திகதி 8 பேரும், 4 ஆம் திகதி மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர். இ

வ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில், தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி அவர் மத்துகம - நவ துடுவ பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கடந்த மார்ச் 10 ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே நேற்று முன்தினம் கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் வீடு திரும்பியதும் அவரை பார்வை இட வந்தவர்கள், அவ்வீட்டில் வசித்த அந்நபரின் தாய் மற்றும் உறவுக்கார யுவதி ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவர் வீடு திரும்பியதும் அவருடன் பழகிய 17 பேர் சந்தேகத்துக்கிடமான கொரோனா தொற்றாளர்களாக பெயரிடப்பட்டு கராபிட்டிய, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த நபருடன் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தென் கொரியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் ஒன்றாக வீடுகளுக்கு வந்த மேலும் 6 பேர் தொடர்பில் பரிசோதனைகளை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். 

கந்தர, மொரவக, ஊறுபொக்க, கம்புறுபிட்டிய, ஹக்மன பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களே இந்த பரிசோதனைகளுக்கு உள்ளான நபர்களாவர். கம்புறுகமுவ மாவட்ட வைத்தியசாலையில் உள்ள விஷேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டே அவர்களுக்கு கொரோனா தொடர்பிலான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போதே நேற்று முன்தினம் அக்குரஸ்ஸ - மாலிதுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை பரிசோதிக்கும் போதும் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கவில்லை எனவும், அவரது சளிப் படலத்தின் மாதிரியைப் பெற்று பரிசோதித்த போதே கொரோனா இருப்பது தெரிய வந்ததாகவும், கம்புறுகமுவ வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து அவர் உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அத்துடன் அவரது மனைவி, மூன்று பிள்ளைகளும் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த ஊர் முடக்கப்பட்டு அங்கு வசிப்போர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் போதுமானதாக இல்லை எனவும் அவற்றை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. 

இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை விரிவு படுத்தலை ஆராய தற்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா கூறினார்.

No comments:

Post a Comment