உலக சுகாதார அமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டொலர்களை வழங்குவதாக சீனா அறிவித்தது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

உலக சுகாதார அமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டொலர்களை வழங்குவதாக சீனா அறிவித்தது

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பிற்கு கூடுதலாக 30 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசால் 26 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், உலகளாவிய சுகாதாரம் தொடர்பான விவகாரங்களையும் 'டபிள்யூ.எச்.ஓ’ எனப்படும் உலக சுகாதார அமைப்பு கையாண்டு வருகிறது. 

சுவிஸ்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பாகும். 

இந்த அமைப்பில் இலங்கை, அமெரிக்கா, சீனா உட்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தனை நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அதிக நிதியுதவி செய்து வந்தது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை எனவும், வைரஸ் தொடர்பான தகவல்களை மறைத்து சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கிரங்கமாக குற்றம் சாட்டினார். 

மேலும், அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியையும் ஜனாதிபதி டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் அந்த அமைப்புக்கு சீனா கூடுதல் நிதி வழங்கியுள்ளது. 

வளர்ந்து வரும் நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் உலகளாவிய முயற்சிகளுக்காக கூடுதலாக 30 மில்லியன் டொலர்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் கூறுகையில்,'' ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 20 மில்லியன் டொலர்களுடன் சேர்த்து கூடுதலாக 30 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளில் சுகாதார பணிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்’’ என்றார்.

உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா ஆண்டுக்கு சராசரியாக 400 முதல் 500 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது. 

ஆனால் சீனாவோ ஆண்டுக்கு சராசரியாக 40 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment