கொரோனா தொற்றுக்குள்ளான தாய் பிரசவித்த குழந்தை பூரண சுகத்துடன் : கணவன் உட்பட 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

கொரோனா தொற்றுக்குள்ளான தாய் பிரசவித்த குழந்தை பூரண சுகத்துடன் : கணவன் உட்பட 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

(எம்.எப்.எம்.பஸீர்) 

பேருவளை, பன்வில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவித்துள்ள குழந்தை பூரண சுகத்துடன் உள்ளதாகவும், குழந்தையின் தாய்க்கு மலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படும் நிலையில் குழந்தையும் அதே வைத்தியசாலையில் குழந்தைகள் சிறப்பு பிரிவில் உள்ளதாக பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் வருண செனவிரத்ன தெரிவித்தார். 

இந்நிலையில் குறித்த தாயை பிரசவத்துக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ர முச்சக்கர வண்டியின் சாரது, குறித்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 160 பேரை இதுவரை தனிமைபப்டுத்தியுள்ளதாக வைத்தியர் வருண செனவிரத்ன மேலும் கூறினார். 

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு (சைட்டம்) நேற்றைய தினம் மாற்றப்பட்டார். 

இந்நிலையிலேயே அவருக்கு அங்கு கொரோனா தொடர்பில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி, பிரசவத்துக்காக நாகொட வைத்தியசாலையில் கடந்த வெள்ளியன்று அனுமதிக்கப்பட்ட குறித்த 28 வயதான தாய், பிரசவ சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்படும் போது தாதி ஒருவர், அத்தாயின் ஊர் பெயரைக் கோரியுள்ளார். அப்போது அவர் பேருவளை - பன்வில என பதிலளித்த நிலையில் தாதிக்கு, ஏற்பட்ட சந்தேகத்தில் செய்த பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோன தொற்று உறுதி செய்யப்பட முன்னர், தாய்க்கு பிரசவ சிகிச்சைகளுக்கு உதவிய குறித்த வைத்தியசாலையில் 6 தாதியர் உள்ளிட்டோர் தனிமைபப்டுத்தலுக்கு ஏற்கனவே உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய, அக்குழந்தையின் இரத்த மாதிரி பொரளை மருத்துவ ஆய்கூடத்துக்கு அனுப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே குறித்த தாயும், குழந்தையும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கவென விஷேடமாக வசதிகள் செய்யப்பட்டுள்ள மாலபே, நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் மகேஷ் கருணாதிலக தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் களுத்துறை - நகொட வைத்தியசாலை, பேருவளை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரின் தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது, குறித்த 28 வயதான தாய் பேருவளை பன்வில பகுதியிலுருந்து சற்று தொலைவாக உள்ள கிராமமொன்றில் வசித்துள்ளார். 

அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று, அங்கு தனது இரு பிள்ளைகளை விட்டுவிட்டு, கணவன், தாயாருடன் சென்றே களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக முன்னிலையாகியுள்ளார். அவ்வாறு வைத்தியசாலைக்கு உள் நுழையும் போது பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. 

பேருவளையின் பன்வில பகுதியில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படாத பிரதேசத்தில் இந்த தாய் வசித்துள்ள நிலையில், பொது சுகாதார பரிசோதகரினால் எந்த ஆவணங்களும் அப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், வைத்தியசாலை நுழைவின் போது குறித்த பெண்ணிடம் அவரது முகவரி வினவப்பட்டுள்ளது. 

அப்போது அவருடன் இருந்த தாயாரே பதில் அளித்துள்ள நிலையில், அவர் தனது முகவரியை கொடுத்துள்ளார். அதன் பிரகாரமே பேருவளை - அம்பேபிட்டி என அப்பெண்ணின் தயார் வீட்டு முகவரி வைத்தியசாலையில் பதியப்பட்டுள்ளது. அந்த முகவரியே, பி.எச்.டி. அட்டையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் பிரசவத்துக்காக பிரசவ சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து செல்லும் போது தாதி ஒருவர் அப்பெண்ணிடம் ஊர் பெயரை வினவிய போது அவர் ஊர் பன்வில என தெரிவித்துள்ளார். இதனால் தாதியர்கள் கலவரமடைந்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருவளை பகுதியில் முடக்கப்பட்ட பிரதேசமாக பன்வில காணப்படுவதே அதற்கான காரணமாகும். 

அதனையடுத்து அப்பெண், சாதாரண பிரசவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அப்பெண்ணுக்கு கொரோன தொடர்பிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளான. அதன்போதே அவர் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக களுத்துறை - நாகொட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. 

எனினும் அதன் பின்னரேயே அவர் குழந்தையை பிரசவித்திருந்துள்ளார். அவரது ஊர் விபரம் தெரியவந்த பின்னர் அவரை உரிய பாதுகபபு வழி முறைகளினுடனேயே வைத்தியர்கள் அனுகியுள்ளதால், அச்சந்தர்ப்பத்துக்கு முன்னர் அப்பெண் தொடர்பில் சேவைகளை வழங்கிய தாதியர் 6 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக நாகொட வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

பின்னர் குறித்த தாய் தொடர்பில் விசாரணை செய்த போது, அப்பெண் தனிமைபப்டுத்தப்பட்ட பன்வில கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 30 வீடுகள் வரை மிக நெருக்கமாக உள்ளமை அவதானிக்கப்ப்ட்டுள்ளது. எனினும் அப்பகுதி முடக்கப்பட்ட பகுதியல்ல என பிரதேச மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார். 

குறித்த தாய் வெளியே நடமாடுவதும் குரைவு எனவும், அனைத்து வெளித் தேவைகளையும் கணவரே பூர்த்தி செய்துள்ளமையையும் சுகாதார பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

அத்தாயின் வீடு அமைந்துள்ள 'சபா ஸ்கிம்' எனப்படும் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறிய கடை ஒன்றுக்கு பன்வில பகுதி மக்கள் பொருட் கொள்வனவுக்கு வருவதும், அக்கடைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்து சென்றுள்ளமையும் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அக்கடை உரிமையாளர் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அக்கடையிலேயே குறித்த தாயின் கணவர் பொருட்களை கொள்வனவு செய்வது தெரியவந்துள்ள நிலையில், கொரோனா தொற்றாளரால் தொடுகைக்கு உள்ளான பொருளொன்றினை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதன் ஊடாக அத்தாய்க்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகதார துறையினர் சந்தேகிக்கின்ரனர். 

இது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் சுகாதார தரப்பினர் தற்போது 'சபா ஸ்கிம் ' மக்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment