மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு பி.சி.ஆர் பரிசோனை! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு பி.சி.ஆர் பரிசோனை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நால்வருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள PCR பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய PCR பரிசோதனை கடந்த திங்கட்கிழமை முதல் இவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 பேரில் 08 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவரே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்” எனவும் தெரிவித்தார்.

“கொரோனா பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் கொரோனா நோயாளர்களை அல்லது, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் குணங்குறியுள்ளர்களையும் இப்பிரிவிற்குள் எடுப்பதற்கு பிரத்தியேக வாயல் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது PCR பரிசோதனை மேற்கொள்வதை அடுத்து, இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவொன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார். 

“தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்கள் சமூக இடைவெளியை பேணி அமரக்கூடிய வகையில் மேலதிக ஆசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, கிளினிக் சிகிச்சைக்கு வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் விநியோகிக்கப்படுகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறும் அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(புதிய காத்தான்குடி நிருபர்)

No comments:

Post a Comment