மலையகத்தில் இன்று சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினரா? - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

மலையகத்தில் இன்று சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினரா?

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (23) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்தனர்.

ச.தொ.ச. விற்பனை நிலையங்கள், வங்கிகள், சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஏனைய முக்கியமான சில வர்த்தக நிலையங்களில் மக்கள் அணிவகுந்து நின்றதை காணக்கூடியதாக இருந்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களில் இந்நிலைமையே காணப்பட்டது.
பொலிஸ் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து நகரங்களுக்கு வருபவர்கள் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும், வரிசைகளில் நிற்கும்போது மூன்றடி இடைவெளியே பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி நடைமுறையை 75 வீதமானோர் கடைபிடித்திருந்தாலும் ஏனையோர் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றாமல் இருப்பதையும் நகரப்பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது.

ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ உட்பட நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கு வந்திருந்தவர்களுள் ஒரு சிலர் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், முகக் கவசங்களையும் அணியவில்லை.
இதனால் ஏனையோர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளானார்கள். மூன்றடி இடைவெளியைகூட பின்பற்றாமல் சிலர் கூட்டமாக இருப்பதையும் காணமுடிந்தது. இத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், எச்சரிக்கை விடுத்ததுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கினர்.

அதேவேளை, உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய மக்கள், இரு வாரத்துக்குரிய பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்தனர் என வர்த்தக பிரமுகர்கள் தெரிவித்தனர்.

நகரத்தின் சில இடங்களில் கைகளை கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment