சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கடிதம்

(எம்.மனோசித்ரா) 

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இன்றியைமையாததாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதைப் பற்றியும் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது பற்றியும் கலந்துரையாடுவதற்குக் குழு ஒன்றினை நியமிப்பது பற்றிய அறிவித்தலை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான செல்வி அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தென்னகோன் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோருக்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது போதிய தனிநபர் துப்பரவு வசதிகளும் சுகாதார வசதிகளும் இன்றி அளவுக்கதிகமான கைதிகளுடன் சிறைச்சாலைகள் நெரிசல்மிக்கவையாகக் காணப்படுகின்ற காரணத்தினால் கொவிட் 19 இனால் தொற்றுக்குள்ளாகும் அதிக சாத்தியப்பாட்டினை கைதிகள் கொண்டுள்ளனர். 

இவ்வாறான நெரிசல்மிக்க சிறைச்சாலைகளில் நபர்களுக்கிடையில் போதிய அளவு தூரத்தினைப் பேணுவதும் சவர்க்காரமும் தண்ணீரும் கைதிகளுக்குத் தாராளமாகக் கிடைக்காத காரணத்தினால் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவது உள்ளிட்ட பொதுவான தடுப்பு நடவடிக்கைகளைக் கைதிகளினால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. 

மேலும் சிறைச்சாலைக்குப் பணியாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்ற காரணத்தினால் சிறைச்சாலையினை மூடிவிடுவதும் சாத்தியமற்றதாகும். 

கொவிட் 19 தொற்று ஏற்படுவது பற்றிச் சிறைக் கைதிகள் மத்தியிலும் பணியாளர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சத்தினை விலக்குவதற்கு சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதும் ஏனைய நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். 

இவ்வாறான அச்சங்கள் பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளதுடன் அநுராதபுரச் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டினால் மரணங்கள் ஏற்படுவதற்கும் கைதிகளுக்கு காயங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது. 

மேலும் இந்தியா, கொலம்பியா மற்றும் இத்தாலி போன்ற ஏனைய நாடுகளிலும் கொவிட் 19 காரணமாக அமைதியின்மையும் மரணங்களும் சம்பவித்துள்ளன. சிறைச்சாலைகள் தொற்றுப் பெருகும் இடங்களாக மட்டுமன்றி அமைதியின்மையும் வன்முறையும் பரவக்கூடிய இடங்களாகவும் மாறும் சாத்தியத்தினையே இது குறிக்கின்றது. 

இலங்கையின் கைதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் விளக்கமறியல் கைதிகள் என்பது எமக்குத் தெரியும். மேலும் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தமது அபராத தொகையினைச் செலுத்தத் தவறியவர்களாகவே உள்ளனர். 

சிறிய குற்றங்கள் மற்றும் பிணை வழங்கப்படக் கூடிய குற்றங்களுக்குப் பிணை வழங்க மறுப்பதும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகின்றமையும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கும் முடிவதற்கும் நீண்ட காலம் காத்திருப்பதுமே சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாக மாறுவதற்கான காரணங்களாகும். 

'வீட்டு விடுப்பு' மற்றும் 'உரிமத் திட்டம்' போன்ற தற்போதுள்ள திட்டங்கள் நன்கு பயனளித்துள்ளதெனச் சிறைச்சாலைத் திணைக்களப் புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவற்றினை அமுல்படுத்துவதில் காணப்படும் அரச நிர்வாகத் தாமதங்கள் தீர்க்கப்பட வேண்டும். 

கொவிட் 19 தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காகச் சிறைக் கைதிகளை விடுவிக்குமாறும் இது தொடர்பிலான குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படலாம் என்றும் ஜனாதிபதியிடமும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மார்ச் 16 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது. 

இது உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என நாம் எதிர்பார்ப்பதுடன் மார்ச் 26 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்திற்கு முன்னர், சிறைக்கைதிகளின் விடுவிப்பிற்கான பூரணமான தெரிவடிப்படையினை உருவாக்குவதற்காக நாம் சில மேலதிக ஆலோசனைகளையும் பகிர விரும்புகின்றோம். 

குறிப்பாக கடுமையான நோய்களினால் அல்லது மரணத்தினை ஏற்படுத்தும் முற்றிய நோயினால் வருந்துபவர்களின் பாதிப்புறு நிலையினையும் முதியவர்களின் பாதிப்புறு நிலையினையும் தமது தாய்மார்களுடன் சிறைச்சாலையில் வாழும் பிள்ளைகளின் பாதிப்புறு நிலையினையும் உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கும் கொவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பிணை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளைப் பரிசீலித்து அமுல்படுத்துமாறு நாம் கௌரவ நீதி அமைச்சரின் தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

குற்றச் செயல்களின் தீவிரம் மற்றும் தன்மை ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள நடவடிக்கைகளுடன் விசேட நீதிமன்ற விசாரணைகள், நிர்வாக மீளாய்வுகள் மற்றும் பொருத்தமானபோது ஜனாதிபதியின் மன்னிப்பு போன்ற விசேட அவசர நடவடிக்கைகள் இணைந்த பரிபூரணமான அணுகுமுறைக்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம். 

இச்செயல் விதிகளை அமுல்படுத்துகையில், வெளிப்படைத் தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக, விடுவிக்கப்படவுள்ள சிறைக் கைதிகளைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தெரிவடிப்படையினையும் அவ்வாறு விடுவிக்கப்படவுள்ள ஒவ்வொரு வகையிலுமான சிறைக் கைதிகளின் எண்ணிக்கையினையும் பகிரங்கப்படுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment