எமது தலைவர் நான்கரை வருடங்களாக சிறைச்சாலையில் உள்ளார் - பிள்ளையான் வேட்பு மனுவில் இன்று கையொப்பமிட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

எமது தலைவர் நான்கரை வருடங்களாக சிறைச்சாலையில் உள்ளார் - பிள்ளையான் வேட்பு மனுவில் இன்று கையொப்பமிட்டார்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அக்கட்சியின் படகுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து வேட்பு மனுவில் இன்று கையொப்பமிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தனினால் இக் கையொப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சி. சந்திரகாந்தனின் பெற்றோர், கட்சியின் பிரமுகர்கள் எனப் பலரும் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் செயலாளர் பூ. பிரசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நீதிமன்ற உத்தரவினைப் பெற்றதன் பின்னர் இன்று வேட்பு மனுவில் கையொபப்பம் இட்டிருக்கின்றார். 
அந்த வகையில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தைக் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை நேசிக்கின்ற தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்த வகையில் எமது மாவட்ட மக்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கின்ற வகையில் பாரிய சுமையினை எமது தோளில் சுமந்த வண்ணம் களமிறங்கி இருக்கின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு தமிழர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பயணிக்கும். நாளை மறுதினம் எமது வேட்புமனு பாரம் கொடுக்கப்பட இருக்கின்றது. எமது தலைவர் நான்கரை வருடங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள போதும் எமது மட்டக்களப்பு மக்களை நம்பி, எமது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இன்று வேட்பு மனுவில் கையயொப்பம் இட்டிருக்கின்றார். 

எனவே, எமது மக்களின் ஆதரவுடன் எமது கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்று வலுவான ஒரு அரசியற் தலைமையை உருவாக்குவதுடன், மக்களின் திடமான நிலைக்குப் பாடுபடும் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment