ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிடும் - தீர்மானத்தை மீறினால் கட்சியில் இடமில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிடும் - தீர்மானத்தை மீறினால் கட்சியில் இடமில்லை

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலே பொதுத் தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கட்சியின் யாப்பை மீறும் வகையிலும் செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மதித்து, செயற்குழுவின் தீர்மானத்திற்கினங்க செயற்படுபவர்களுக்கு மாத்திரமே கட்சிக்குள் இருப்பதற்கான அனுமதியிருக்கின்றது.

இவ்வாறு இருக்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். பொதுத் தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பொதுக்கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை கட்சியின் செயற்குழு வழங்கியிருந்தது.

இதேவேளை யானை அல்லது அன்னத்தை சின்னமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பின்னர் அன்னம் சின்னமாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் தீர்வை காணுவதற்காக அவர்கள் ஒருபோதும் எம்முடன் இணைந்து கலந்துரையாடவில்லை.

கட்சிக்குள் யானை சின்னத்திற்கே பெரும்பான்மை கிடைத்திருந்தது. இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வந்துள்ளது.

இருந்த போதிலும் பொதுக் கூட்டணிக்கு அன்னம் சின்னத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானித்தோம். இவ்வாறு அன்னம் சின்னத்தை வழங்கினால் பொதுக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதிவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவையிருந்தது. இதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

எனவேதான் இந்த விடயம் தொடர்பில் தற்போது சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுபவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment