அமெரிக்காவில் கொரோனா பலி 400 ஐ கடந்தது : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியது - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

அமெரிக்காவில் கொரோனா பலி 400 ஐ கடந்தது : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியது

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 400-ஐ கடந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் சுமார் 34 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் இந்த கொடிய வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ கடந்து விட்டது. இதில் அதிகபட்சமாக நியூயோர்க்கில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 

இதைப்போல வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் குடியரசு கட்சி எம்.பி. கெண்டகி ராண்ட் பால் முக்கியமானவர் ஆவார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களிலும் 15 ஆயிரம் நோயாளிகளுடன் நியூயோர்க்தான் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து உள்ளது. குறிப்பாக நாட்டில் 3-ல் ஒரு பங்கு மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள நியூயோர்க்கில் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே மருத்துவ உபகரணங்கள் இருக்கும் எனவும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைக்காவிட்டால் மக்கள் மரணத்தையே தழுவுவார்கள் எனவும் நியூயோர்க் மேயர் பில் தே பிளாசியோ கூறியுள்ளார்.

இதைப்போல கலிபோர்னியா மாகாணத்திலும் வைரஸ் தொற்று அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, அந்த மாகாணத்தில் மாபெரும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்புக்கு கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கலிபோர்னியா, நியூயோர்க், வா‌ஷிங்டன் பகுதிகளில் கொரோனா தொற்றை மாபெரும் பேரிடராக டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்த மாகாணங்களுக்கு அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறிய டிரம்ப், நியூயோர்க், கலிபோர்னியா மாகாணங்களில் முறையே 1000, 2000 படுக்கை மருத்துவமனைகளை அமைக்கவும் தேசிய அவசர கால மேலாண்மை ஏஜென்சிக்கும் உத்தரவிட்டார்.

இதைப்போல வா‌ஷிங்டனில் 3 பெரிய மருத்துவ நிலையங்களும், 4 சிறிய மருத்துவ நிலையங்களும் உருவாக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த 3 மாகாணங்களிலும் தேசிய பாதுகாப்பு படையினரை நிறுத்தவும் அவர் ஒப்புதல் அளித்தார்.

No comments:

Post a Comment