கடன் சலுகையை எதிர்வரும் 3 மாதகாலத்திற்கு இரத்துச் செய்யுமாறு மத்திய வங்கி உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

கடன் சலுகையை எதிர்வரும் 3 மாதகாலத்திற்கு இரத்துச் செய்யுமாறு மத்திய வங்கி உத்தரவு

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்காக மோட்டார் வாகனம், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கான கடன் சலுகையை எதிர்வரும் 3 மாத காலத்திற்கு இரத்துச் செய்யுமாறு நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகள் அனைத்தும் பின்னடைந்துள்ள நிலையில், நாணயமாற்று வீதத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நிதிச்சந்தையில் ஏற்படத்தக்க பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி சில அவசர தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது. 

1949 ஆம் ஆண்டு 58 ஆம் இலக்க நாணயச் சட்டம், 1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கி நடைமுறைச் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு நாணயமாற்று வீதச் சட்டம் ஆகியவற்றின் கீழேயே மத்திய வங்கியினால் இந்த அவசரத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. 

அதன்படி இலங்கையின் வங்கிச் சட்டத்தின் கீழ் விசேடமாகக் குறித்துரைக்கப்பட்டவை தவிர, மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் சலுகையை 3 மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறு நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி அறிவுறுத்தியிருக்கிறது. 

மேலும் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு கடன் சலுகை வழங்கப்படுவதையும் எதிர்வரும் 3 மாதகாலத்திற்குத் தடை செய்திருக்கும் மத்திய வங்கி, இலங்கையில் அனுமதியளிக்கப்பட்ட வங்கிகள் சர்வதேச பிணைமுறிக் கொள்வனவில் ஈடுபடுவதையும் தடை செய்திருக்கிறது. 

அதுமாத்திரமன்றி உயர்ந்த பட்சம் 5000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட (போக்குவரத்துச் சலுகை) பணம் காணப்படின் மாத்திரமே அதனை மாற்றி வழங்க வேண்டும் என்றும் அனுமதியளிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையங்களுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டிருக்கிறது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் கீழ் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவையேற்படின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதாகவும் அது அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment