பாராளுமன்றம் இன்று கலைப்பு? : ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் சாத்தியம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

பாராளுமன்றம் இன்று கலைப்பு? : ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் சாத்தியம்

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அழைப்பைவிடும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இன்று நள்ளிரவு வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. 

19ஆவது திருத்தச்சட்டத்திற்கிணங்க புதிய பாராளுமன்றமொன்று அமைந்ததும் அதனை ஜனாதிபதியால் நான்கரை வருடங்களின் பின்னர்தான் கலைக்க முடியும். அதன் பிரகாரமே நேற்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அமையும் காபந்து அரசாங்கமே அதிகாரம் மிக்கதாக காணப்படும். காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் மாத்திரமே அங்கம் வகிப்பர். ஏனைய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தானாக செயலிழந்துவிடும். 

பாராளுமன்றம் கலைக்கப்படும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டதும் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நகர்வுகளை கொண்டுசெல்லும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குரியதாகும். 

தேர்தல் ஆணையாளர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சில திகதிகளை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை தேர்தலை நடத்தப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளதாகத் தெரிய வருகிறது. 

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் மற்றும் வெசாக் ஹஜ் பெருநாளுக்கு முன்னர் 25ஆம் திகதியே பொருத்தமான தினமாக காணப்படுவதால் இத்திகதியை தேர்தலை நடத்தும் தினமாக ஜனாபதியின் அதிவிசேட வர்த்தமானி தாங்கி வரும் என ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமையை தேர்தல் தினமான ஜனாதிபதி அறிவித்தால் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்குமிடையில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான காலமாக தேர்தல் திணைக்களம் அறிவிக்கும். 

17ஆம் திகதி காலை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 10 மணி முதல் 10.30 வரை ஆட்சேபனைக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு பகல் 11 மணிக்கு வேட்புமனுக்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். 

இம்முறை சுயேச்சைக் குழுக்கள் ஒரு வேட்பாளருக்கு கட்டுப்பணமாக இரண்டாயிரம் ரூபா செலுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை. 

2019ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்புக்கமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885 பேர் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். 

இதேவேளை, நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கட்டாயம் இன்றைய தினம் பாராளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானியை ஜனாதிபதி நள்ளிரவு வெளியிடுவார் எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad