ஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

ஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி, ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) ஹொரவபொத்தானை, பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோருடன் குறித்த இடத்திற்கு சென்றபோது, அங்கு சுமார் 80 பேர் கூடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த நபர்களில் 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களுள், குறித்த பள்ளிவாசலின் மௌலவி மற்றும் தலைவரும் இருந்ததாகவும் அவர்களை, கடும் எச்சரிக்கையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிவாயல்களில் ஒன்று கூடி தொழுகை நடாத்த வேண்டாமெனவும் பள்ளிவாயல்களில் அதிகளவிலான மக்கள் ஒன்று கூட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஜும்மா தொழுகைக்காக ஒன்று சேர்ந்த வேளையிலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை கெப்பித்திகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment